தஞ்சாவூர்:தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த ஆண்டு டெல்டா பாசன விவசாயிகளுக்கு குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டு, தண்ணீர் முழுமையாக கிடைக்காத காரணத்தினால் சுமார் 3 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்த நெற்பயிர்கள் காய்ந்து கருகி பெரும் நஷ்டத்திற்கு விவசாயிகள் உள்ளாகி உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) திமுக அரசு குறுவை சாகுபடிக்கு காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்படாத காரணத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு திட்டம் கிடைக்கவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக திமுக அரசு டெல்டா பாசன விவசாயிகள் பயிரிட்ட குறுவை சாகுபடி நெற்பயிருக்கு காப்பீட்டு திட்டத்தில் இடம்பெறவில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது குறுவை தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 54.17 கோடி ரூபாய் மட்டுமே விவசாயிகளுக்கு கிடைக்கும். இது போதாது. டெல்டா பாசன விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
அதிமுக பீ டீமாக செயல்படுகிறது என்ற டிடிவி தினகரன் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த அவர், “திமுகவிற்கு எதிரி அதிமுக, ஏதாவது சொல்ல வேண்டுமென்று செய்தி வரவேண்டும் என்று கூறுகிறார். இல்லையெனில் மக்கள் அவரை மறந்து விடுவார்கள். போக்குவரத்து ஊழியர்கள் நியமனத்தை தனியாருக்கு விடுவது கண்டிக்கத்தக்கது. சசிகலா 2021ல் பொது வாழ்வில் இருந்து விலகி விட்டேன் என்று கூறினார். இப்போது ரீ என்ட்ரி என்கிறார்.
கடந்த முறை 38 பேர் எம்பியாக திமுகவில் இருந்தனர். அப்போது நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நீட் தேர்வு விலக்கிற்கு பரிகாரம் தேடி இருக்க வேண்டும். இப்போது 40 எம்பிக்கள் உள்ளனர். நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரலை அழுத்தமாக தெரிவித்து நீட் தேர்விற்கு விலக்கு பெற வேண்டும். திமுகவின் நீட் போராட்டம் வெறும் கண் துடைப்பு” என்று கூறினார். இந்த பேட்டியின் போது முன்னாள் அமைச்சர் காமராஜ், அமைப்புச் செயலாளர் காந்தி, மாவட்ட செயலாளர் சேகர், மாநகரச் செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க:நாடாளுமன்றத்தில் இனி திமுக வலுவான எதிர்க்கட்சி... என்னென்ன நடக்கப் போகுது பாருங்க! - ஆர்.எஸ் பாரதி ட்விஸ்ட்! - RS Bharathi