சென்னை: தேர்தல் விதிமீறல் தொடர்பாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி. நவாஸ் கனி மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட நவாஸ் கனி, கமுதி பகுதியில், மாவட்ட தேர்தல் அதிகாரியின் அனுமதி பெறாத வாகனத்தில் பிரச்சாரம் செய்ததாக, கமுதி போலீசார், தேர்தல் விதிமீறல் வழக்கைப் பதிவு செய்திருந்தனர்.
ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி. நவாஸ் கனி உள்ளிட்ட 7 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், 'எந்த குற்றமும் செய்யாத நிலையில், அரசியல் பழி வாங்கும் நோக்கில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கை ரத்து செய்ய வேண்டும்' எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், 'வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் நவாஸ் கனியின் பெயர் இடம்பெறாவிட்டாலும், தொடர்ந்து நடந்த விசாரணையில் அவரது தொடர்பு கண்டறியப்பட்டுள்ளது என்பது வழக்கு ஆவணங்களில் தெரிய வருகிறது. குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளதால், வழக்கை ரத்து செய்ய முடியாது' எனக் கூறி, நவாஸ் கனியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.