சேலம்: நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19ம் தேதி முதல் தொடங்கி 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்.19 தேதி தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்துத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறை ஒன்று தொடங்கி தேர்தல் தொடர்பாக பணப்பட்டுவாடா ஏதாவது நடைபெறுகிறதா? என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணத்தினை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த தேர்தலையொட்டி அசம்பாவிதம் ஏற்படுத்த சமூக விரோதிகள் முயன்று வருவதாக தமிழக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு போலீசார் தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி உத்தரவின் பேரில் மாநகரில் நான்கு பேர் கொண்ட எட்டு குழுக்களை அமைத்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், தேர்தல் நடத்தும் அலுவலகம் மற்றும் தேர்தல் வாக்குப்பதிவு மையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், வெடிகுண்டு தடுப்பு பிரிவு சிறப்பு குழு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.