மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு, செம்மங்குளம் பகுதியில் கடந்த 2ஆம் தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடிய சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியது. சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட கூறைநாடு, செம்மங்குளம் பகுதியில் வனத்துறையினர், காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் இணைந்து சிறுத்தையைப் பிடிக்கத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சிறுத்தை ஆரோக்கியநாதபுரம், தூக்கணாங்குளம் பகுதியில் உள்ள கருவேலங்காடு பகுதிக்கு இடம் பெயர்ந்தது. அப்பகுதியில் அறுவடை இயந்திரத்தின் மீது உறங்கிய நபர் ஒருவர் சிறுத்தை நடந்து சென்றதைப் பார்த்ததாகக் கூறி உள்ளார். அதனைத்தொடர்ந்து, வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டனர்.
மேலும், சிறுத்தையைப் பிடிப்பதற்கு ஆனைமலை புலிகள் காப்பகத்திலிருந்து வன காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், 16 தானியங்கி கேமராக்கள், மதுரையிலிருந்து 3 ராட்சச கூண்டுகள், வலைகள் மற்றும் வனத்துறையினருக்குப் பாதுகாப்பு உடைகள், உபகரணங்களும் வரவழைக்கப்பட்டது. மேலும், காட்டுப்பகுதியில் வலைகள் கட்டி மூன்று ராட்சச கூண்டுகளும் வைக்கப்பட்டன. கருவேலங்காட்டில் பொருத்தப்பட்ட தானியங்கி கேமரா மற்றும் கூண்டுகளில் சிறுத்தை சிக்கவில்லை.
மேலும், சிறுத்தை எங்கிருக்கிறது என்பது புலப்படாத நிலையில் தருமபுரியிலிருந்து இரவு நேரத்தில் கண்காணிக்கக்கூடிய தெர்மல் ட்ரோன் கேமரா வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த கேமரா இரவில் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டறிய உதவும் என்று தெரிவிக்கும் வனத்துறையினர் 13 குழுக்களாகப் பிரிந்து மயிலாடுதுறை நகரை ஒட்டிய பகுதிகளில் சிறுத்தையைத் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.