கோயம்புத்தூர்:கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த செம்மனாம்பதி கிராமத்தைச் சேர்ந்த விவசாய தம்பதி விஜய் மற்றும் திவ்யா. இவர்களுக்கு நான்கு வயதில் உதயதீரன் என்ற மகன் உள்ளார். உதயதீரன் பிறந்தபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அச்சிறுவனின் உடல் நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டதாகவும், மற்ற குழந்தைகளை போல இயல்பாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டதாகவும், மேலும் நாளடைவில் காலில் தொடர்ந்து வலி ஏற்பட்டு சிறுவன் அவதி அடைந்ததும் பெற்றோருக்குத் தெரிய வந்துள்ளது.
அதன் பின்னர், உதயதீரனின் பெற்றோர் மருத்துவர்களை நாடியுள்ளனர். சிகிச்சையில் சிறுவனுக்கு 'தசை நார் சிதைவு நோய்' (Muscular Dystrophy) எனும் அரியவகை நோய் இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து மருத்துவர்கள், இந்த நோய்க்கு உயிர் காக்கும் மருந்து இந்தியாவில் இல்லை எனக் கூறியுள்ளனர்.
மேலும், சிறுவனுக்கு ஐந்து வயதுக்கு மேல் இந்த நோயின் பாதிப்பு அதிகளவில் காணப்படும் என்றும், அதிகபட்சமாக 20 வயது வரை சிறுவன் உயிரோடு இருப்பான் என்றும் மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, சிறுவனின் பெற்றோர் விஜய் மற்றும் திவ்யா இணையதளத்தில் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள அறிய வகை நோய்க்கான சிகிச்சை குறித்து தேடியுள்ளனர்.
அப்போது, அமெரிக்கா மற்றும் துபாய் போன்ற நாடுகளில் இதற்கான சிகிச்சை இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால், சிகிச்சைக்கு மொத்தம் 26 கோடி ரூபாய் செலவாகும் என்பதும் தெரிய வந்துள்ளது. இது குறித்து சிறுவனின் தந்தை விஜய் கூறுகையில், "எனது மகன் உதயதீரன், அவனது மூன்று வயது வரை நலமுடன் தான் இருந்தான்.