சென்னை: சென்னை பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் 16ஆம் நாள் நினைவேந்தல் மற்றும் படத் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி மற்றும் அவரது குடும்பத்தினர், திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், புரட்சி பாரத கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகை, ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள், திரைத்துறையினர், புத்த மதத்தினர் மற்றும் பொதுமக்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி தொடங்கிய முதல் 2 மணி நேரம் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவுகளை போற்றும் வகையில் கானா இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பெரிய திரை அமைக்கப்பட்டது. அந்த திரையில் ஆம்ஸ்ட்ராங், மனைவி பொற்கொடி மற்றும் மகள் சாவித்திரிபாய் ஆகியோர் இணைந்திருந்த பழைய நினைவுகளை நினைவு கூறும் வகையில் வீடியோ தொகுப்பு மற்றும் ஆம்ஸ்ட்ராங் கடந்த காலங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் மேடையில் பேசிய வீடியோ தொகுப்புகளும் 1 மணி நேரம் திரையிடப்பட்டது.
இதனை அடுத்து, மேடையில் ஆம்ஸ்ட்ராங்கின் உருவப்படத்தை அவரது மனைவி பொற்கொடி திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும், ‘சமத்துவ தலைவர் ஆம்ஸ்ட்ராங்’ என்ற தலைப்பில் ஆம்ஸ்ட்ராங் வரலாறு குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய இயக்குநர் பா. ரஞ்சித், “ஆம்ஸ்ட்ராங் முன்னெடுத்த பணிகளை நாம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்ற கடமை நமக்கு உள்ளது.
முக்கியமாக பௌத்த தளங்களில் ஆம்ஸ்ட்ராங் மேற்கொண்ட பணிகளை நாம் தொடர வேண்டும். ஆம்ஸ்ட்ராங் நினைவை போற்றும் விதமாக சமத்துவ தலைவர் ஆம்ஸ்ட்ராங் என்ற புத்தகத்தை நீலம் பப்ளிகேஷன் மூலம் தயாரித்து தற்போது வெளியிட்டுள்ளோம். மேலும் ஆம்ஸ்ட்ராங் குறித்த ஆவணப்படம் நாளை நீலம் சமூக வலைத்தளத்தில் வெளியிட உள்ளோம்” என்றார்.
புரட்சி பாரத கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி பேசியதாவது, “காவல்துறை மற்றும் உளவுத்துறை தரப்பில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு எச்சரிக்கையோ, பாதுகாப்போ வழங்கப்படவில்லை. எனவே ஆம்ஸ்ட்ராங் இழந்து விட்டோம். தற்போது அதைப்பற்றி பேசி என்ன பயன் உள்ளது. என்னை பொருத்தவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணை சரியான கோணத்தில் சென்று கொண்டிருக்கிறது.