ஐதராபாத்:கடந்த மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு தொடரில் இந்திய துபாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் இரண்டு பதக்கங்களை வென்று வரலாறு படைத்தார். மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மற்றும் அதே பிரிவின் கலப்பு இரட்டையர் பிரிவு என இரண்டு போட்டிகளில் தலா 2 வெண்கலப் பதக்கங்களை மனு பாக்கர் கைப்பற்றினார்.
மேலும், ஒலிம்பிக் வரலாற்றில் ஒரு தொடரில் இரண்டுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற முதல் நபர் என்ற வரலாற்று சாதனையையும் மனு பாக்கர் படைத்தார். இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு தொடரில் தான் பயன்படுத்திய துப்பாக்கியின் விலை குறித்து வீராங்கனை மனு பாக்கர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி விலை இவ்வளவா?
முன்னதாக, மனு பாக்கர் பயன்படுத்திய துப்பாக்கியின் விலை கோடிக் கணக்கில் இருக்கும் என தகவல் பரவியது. இந்நிலையில், தான் அவர் தனது துப்பாக்கியின் விலையை தெரிவித்துள்ளார். அவர் பயன்படுத்தும் துப்பாக்கி ஒரு முறை வாங்கினால் போதுமானது. அதன் ஆயுட்காலம் இருக்கும் வரை அந்த துப்பாக்கியை பயன்படுத்தலாம்.
அதிகபட்சமாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் முதல் 1 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என அவர் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து தனியார் ஊடகத்தின் பேட்டியில் பேசிய அவர், "ஒரு புதிய பிஸ்டல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.1.85 லட்சம் வரை இருக்கும். அதேநேரம் புதியது மற்றும் செகண்ட் ஹேண்ட் முறையில் அதன் விலையில் மாற்றம் இருக்கலாம்.
மேலும், வீரர், வீராங்கனையின் விருப்பத்திற்கு ஏற்ப துப்பாக்கியில் மாற்றம் கொண்டு வரும் நிலையில், அதன் விலையில் மாற்றம் இருக்கலாம். அதேநேரம் வீரர், வீராங்கனை சிறப்பாக செயல்படும் பட்சத்தில் சில நிறுவனங்கள் அவர்களை அணுகி துப்பாக்கியை இலவசமாக கூட தரலாம், அல்லது ஸ்பான்சர்ஷிப் மூலம் வழங்கலாம் என்று" மனு பாக்கர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:9 ஆண்டுகளுக்கு பின் இந்த முடிவு! வங்கதேச டெஸ்டில் ரோகித் செய்த சம்பவம்! - Rohit Sharma