புதுடெல்லி: ஏமன் நாட்டவர் ஒருவரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை குறித்த விவரங்களை அறிந்திருப்பதாகவும், இந்த விஷயத்தில் சாத்தியமான அனைத்து உதவிகளும் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.
ஏமன் நாட்டவர் ஒருவரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நிமிஷா பிரியா கடந்த 2017ஆம் ஆண்டு முதல் அங்கு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை அதிபர் ரஷாத் அல்-அலிமியா அங்கீகரித்துள்ளார். இதன் மூலம் ஒரு மாதத்துக்குள் தண்டனை நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.
இது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "ஏமனில் நிமிஷா பிரியாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை இந்தியா அறிந்திருக்கிறது. அவரை விடுவிக்க வேண்டும் என்ற பிரியாவின் குடும்பத்தின் விருப்பங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம். இந்த விஷயத்தில் சாத்தியமுள்ள அனைத்து உதவிகளையும் இந்தியா அளிக்கும்,"என்றார்.
கேரளாவை சேர்ந்த பிரியா, கடந்த 2017ஆம் ஆண்டு ஏமனை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கு விசாரணையில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. செவிலியரான பிரியா கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஏமனில் தனியார் மருத்துவமனைகளில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். அவருடைய கணவர், மகள் ஆகியோர் கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியா திரும்பினர். அப்போது ஏமனில் உள்நாட்டு போர் தீவிரம் அடைந்ததால் பிரியாவால் இந்தியா திரும்ப முடியவில்லை.
இதையும் படிங்க: புத்தாண்டு கொண்டாட்டம்: பட்டாசு வெடிக்க தடை.. சென்னையில் 19,000 போலீசார் குவிப்பு!
கடந்த 2015ஆம் ஆண்டு ஏமனை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் சேர்ந்து ஏமன் தலைநகர் சானாவில் மருத்துவமனை ஒன்றை பிரியா தொடங்கினார். ஏமனின் சட்டப்படி அந்த நாட்டை சேர்ந்தவர் மட்டுமே தொழில் நிறுவனங்களைத் தொடங்க முடியும் என்பதால் அவருடன் சேர்ந்து பிரியா மருத்துவமனையைத் தொடங்கினார்.
Our response to media queries regarding the case of Ms. Nimisha Priya:https://t.co/DlviLboqKG pic.twitter.com/tSgBlmitCy
— Randhir Jaiswal (@MEAIndia) December 31, 2024
ஒரு கட்டத்தில் பிரியாவை தலால் அப்தோ மஹ்தி சிறை வைத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக பிரியாவின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை வலுக்கட்டாயமாக பறித்ததாகத் தெரிகிறது. இதனால், தலால் அப்தோ மஹ்திக்கு மயக்க மருந்தை ஊசி மூலம் செலுத்தி அவரை மயக்கமடைய வைத்து தப்பிச் செல்லலாம் நினைத்தார்.ஆனால், அளவு அதிகமான மயக்க மருந்தின் காரணமாக தலால் அப்தோ மஹ்தி உயிரிழந்து விட்டார். எனவே பிரியா கைது செய்யப்பட்டார்.
ஏமன் நீதிமன்றத்தில் கடந்த 2018 பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஏமன் உச்ச நீதிமன்றத்தில் பிரியா மேல்முறையீடு செய்தார். கடந்த ஆண்டு மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவு அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து ஏமன் அதிபர் பிரியாவின் மரண தண்டனையை நிறைவேற்ற ஒப்புதல் அளித்துள்ளார்.
பிரியாவை விடுவிக்க வேண்டும் எனில் தலால் அப்தோ மஹ்தியின் குடும்பத்தினர், பழங்குடியின தலைவர்கள் மன்னித்தால் மட்டுமே அவருக்கு விடுதலை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பிரியாவை விடுவிக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு பிரியாவை விடுவிக்க ஏமன் செல்வதற்கு அவரது தாய்க்கு டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பிரியாவை மன்னிக்கும்படி அவர் ஏமன் அரசிடன் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்.