தஞ்சாவூர்: தஞ்சையில் கடந்த 2023-ஆம் ஆண்டை விட இந்தாண்டில் போதைப் பொருள் தொடர்பான வழக்குகள் அதிகரித்துள்ளதாக காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்ட தகவல்களின் வாயிலாகத் தெரியவந்துள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் புழக்கத்தை அறவே ஒழித்திட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முக்கியமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின்படி, போதைப் பொருள்கள் பதுக்குபவர்கள், அதனைக் கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் என 368 பேர் இந்தாண்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை வெளியிட்டுள்ள தஞ்சை மாவட்ட காவல்துறை, இதுதொடர்பாக மாவட்டத்தில் 241 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. இதில், 1,030 கிலோ கஞ்சா, 785 கிராம் டைசிபம் பவுடர், 130 போதை மாத்திரைகள் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 7 இருசக்கர வாகனங்கள், 8 நான்கு சக்கர வாகனங்கள் உள்பட 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பொருள் வழக்குகளில் கைது செய்யப்பட்ட 368 பேரில், 20 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. கைதானவர்களின் வீடுகளில் நடத்திய சோதனையில் ரூ.20 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தஞ்சை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும்"-ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தவெக தலைவர் விஜய் மனு!
கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், இது தொடர்பாக 14 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் தொடர்பான 32 வழக்குகளில் 42 பேருக்கு சிறை தண்டனை மட்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் 4 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் கடந்த ஆண்டை பார்க்கும்போது, 2024-இல் அதிகளவு போதைப் பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2023-ஆம் ஆண்டில் 217 வழக்குகள் பதியப்பட்டு 465 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு 241 வழக்குகள் பதியப்பட்டு 1,030 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.