ஐதராபாத்:18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் கடந்த இரண்டு நாடகளாக சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கோலாகலமாக நடைபெற்றது. ஒட்டுமொத்த ஏலத்தில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் அதிகபட்சமாக 27 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு புது வரலாறு படைத்தார். அவரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
அவரைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் 26 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஏலத்தில் கைப்பற்றப்பட்டார். அதேநேரம், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் சோடை போயினர். அவர்களில் டாப் 5 வீரர்கள் குறித்து இங்கே காணலாம்.
டேவிட் வார்னர்:
கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் முன்னணி வீரராக வலம் வந்தவர். இந்த ஆண்டு தொடக்கத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டேவிட் வார்னர் ஓய்வு பெற்றார். இருப்பினும், 20 ஓவர் கிரிக்கெட் தொடர்களில் தொடர்ந்து விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் மட்டும் 6 ஆயிரத்து 565 ரன்கள் குவித்து உள்ளார். இருப்பினும் டேவிட் வார்னரை ஏலத்தில் எடுக்க அணிகள் ஆர்வம் காட்டாதது ஆச்சரியம் அளிக்கிறது.
பிரித்வி ஷா:
டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கி பல்வேறு ஆட்டங்களில் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிரித்வி ஷா, இந்த முறை ஏலத்தில் எடுக்கப்படவில்லை. கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக பிரித்வி ஷாவ வெளிப்படுத்திய மோசமான ஆட்டத் திறனே அவரை எடுக்காததற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. கடந்த சீசனில் 16 ஆட்டங்களில் இரண்டு அரை சதங்கள் மட்டுமே பிரித்வி ஷா அடித்துள்ளார்.