டெல்லி:தலைநகர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு சென்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் வீரர் பஜ்ரங் புனியா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்தனர். தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோ முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறும் ஹரியானா சட்டமன்ற தேர்தலில் இருவரும் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இரண்டு நாட்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இருவரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து தற்போது இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.
ஹரியானா சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 5ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் தரப்பில் பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் வினேஷ் போகத்தின் சகோதரி பபிதா போகத் ஏற்கனவே பாஜகவில் உறுப்பினராக உள்ள நிலையில், அவரும் ஹரியானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வினேஷ் போகத்தின் பெரியப்பா எம்எஸ் போகத் ஜனநாயக ஜனதா கட்சியின் சார்பில் ஹரியானா சட்டமன்ற தேதலில் ஜுலானா தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக ஹரியானாவில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட வினேஷ் போகத் மத்திய அரசுக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டு இருந்தார். இதனிடையே வினேஷ் போகத் தனது ரயில்வே வேலையை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத் குறிப்பிட்ட எடையை காட்டிலும் 100 கிராம் கூடுதலாக இருந்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து தகுதி நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்த போதும் அவருக்கு பதக்கம் மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஹரியானா சட்டப் பேரவை தேர்தலில் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா போட்டி! ராகுலுடன் சந்திப்பு! - Vinesh Phogat joins congress