தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தக்க சமயத்தில் உதவிய உதயநிதி ஸ்டாலின்... நனவான காசிமாவின் தங்கம் கனவு! தந்தை நெகிழ்ச்சிப் பேட்டி!

அமெரிக்காவில் நடைபெற்ற உலக கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டு வீராங்கனை காசிமாவின் தந்தை ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

Etv Bharat
தமிழக கேரம் வீராங்கனை காசிமா (ETV Bharat)

By ETV Bharat Sports Team

Published : 12 hours ago

சென்னை:அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற 6வது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை காசிமா மகளிர் தனிநபர், இரட்டையர் பிரிவு, குழு பிரிவு என 3 பிரிவுகளிலும் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
இதற்கு முன், கடந்த 2014 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைப்பெற்ற 12 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான போட்டியில் இரண்டாம் பரிசும், 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போட்டியில் முதல் பரிசும் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

சீனியர் பிரிவில் தொடர் சாதனை:

அதைத் தொடர்ந்து வாராணாசியில் நடைபெற்ற 14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் குழு பிரிவில் முதல் பரிசும், தனி நபர் பிரிவில் 3வது பரிசும் பெற்றுள்ளார். பின்னர் 2021ஆம் ஆண்டு மும்பையில் நடைப்பெற்ற 18 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் முதல் பரிசு வென்று உள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் நடைப்பெற்ற சீனியர் பிரிவில் கலந்து கொண்ட காசிமா மூன்றாம் பரிசும், குழு பிரிவில் முதல் பரிசும் பெற்று சாதனை படைத்து இருந்தார். தற்போது அமெரிக்காவில் நடைபெற்ற போட்டியில் அனைத்து பிரிவுகளிலும் கலந்து கொண்டு 3 தங்கம் வென்று சாதனை படைத்து இருக்கிறார்.

காசிமா தந்தை பாஷா பிரத்யேக பேட்டி:

இந்நிலையில் தொடர் வெற்றிகளை குவித்து வரும் பதக்க மங்கை காசிமாவின் வெற்றி குறித்து அவரது தந்தை பாஷா ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, "எங்களுடைய மகள் வெற்றி பெற்ற தருணத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. அது தான் மகிழ்ச்சியின் எல்லையாகவே எங்களுக்கு இருந்தது.

புது வண்ணாரப்பேட்டை செரியன் நகரில் உள்ள பயிற்சி மையத்தில் காசிமா விளையாடியது எங்கள் பகுதியில் வீடியோ மூலமாக ஒளிபரப்பு செய்திருந்தோம். அதிகாலை 4:00 மணி வரை ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது. எங்கள் பகுதி மக்கள் தங்களுடைய குழந்தை விளையாடுவது போன்று அவளுடைய வெற்றியை கொண்டாடினர்.

இது போன்ற ஒரு தருணத்தை நாங்கள் எப்பொழுதும் பார்த்ததில்லை, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. காசிமா வெற்றி பெறும் பொழுது நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமானோர் வந்து திருவிழா போன்று கொண்டாடினர். காசிமாவிற்கு ஏழு வயதில் இருந்து கேரம் போர்டு விளையாடும் ஆர்வம் அதிகரித்தது.

ஏனென்றால் நானும் மாவட்ட அளவில் போர்டு விளையாடி இருக்கிறேன். என்னுடைய மகன் 2016ல் தேசிய ஜூனியர் சாம்பியன் பட்டம் பெற்றிருந்தார். எங்கள் குடும்பத்தில் கேரம் போர்டு விளையாடுவதை பார்த்து ஏழு வயதிலிருந்து காசிமாவிற்கு ஆர்வம் அதிகரித்ததால் 7 வயதிலிருந்து பல்வேறு போட்டிகளில் கலந்து பரிசு பெற்றிருக்கிறார்.

12 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் விளையாடும் போது மாவட்ட, மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தார். சிறு வயதில் இருந்து எப்படி விளையாட வேண்டும் என சொல்லிக் கொடுத்திருக்கிறோம். அதன் அடிப்படையில் சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் உள்ளிட்ட பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.

மகள் காசிமா மட்டுமின்றி எனது மகனும் கடந்த 2016ஆம் ஆண்டு ஜூனியர் நேஷனல் சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறார். எங்களுக்கு பெரிய பின் புலம் என்று எதுவும் இல்லை, நான் ஆட்டோ ஓட்டும் பணி செய்து வருகிறேன். நான் பாதி நாள் ஆட்டோ ஓட்டி மீதி நேரத்தில் பிள்ளைகளுக்கு பயிற்சி அளிக்க வந்து விடுவேன்.

சிறு வயதில் இருந்து சிறப்பாக விளையாடும் காசிமா தமிழ்நாடு கேரம் அசோசியேஷனில் பயிற்சி பெற்றதுக்கு பின் தேசிய சர்வதேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற தொடங்கினார். அதன்பின் அவருடைய ஆட்டம் மாறியது. அதேபோல் தமிழ்நாடு கேரம் அசோசியேஷனின் செயலாளரும் அர்ஜுனா விருது பெற்ற மரிய இருதயம், காசிமாவிற்கு சிறப்பு பயிற்சியை அளித்து சர்வதேச அளவில் விளையாடும் அளவில் உயர்த்தி இருக்கிறார்.

காசிமா உள்ளிட்ட 3 வீரர்கள் அமெரிக்காவில் நடைப்பெற்ற போட்டியில் பங்கேற்பதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டியிருந்தது. அந்த தொகை முழுவதையும் தமிழ்நாடு துணை முதலமைச்சரும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வழங்கி உதவி செய்தார்.

அவர் அந்த தொகை கொடுத்து உதவவில்லை என்றால் காசிமா இந்த சாதனையை செய்திருக்க முடியாது. இரண்டு முறை போட்டிக்கு செல்வதற்கான விசா ரத்து செய்யப்பட்டது. மூன்றாவது முறை அப்ளை செய்த போது தான் விசா கிடைத்தது. ஆனால் இந்த விசா பெறுவதற்கு பல பேரிடம் கடன் வாங்கி 3 லட்சம் ரூபாயை தயார் செய்தேன்.

தற்போது பயிற்சி பெற்று வரும் இடம் மிக சிறியதாகவும், அடிப்படை வசதிகள் இல்லாமலும் இருக்கிறது. அவற்றை முழுமையாக பராமரித்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடத்தை கட்டி கொடுக்க வேண்டும். ஏனென்றால் 14 தேசிய சாம்பியன்கள் அந்த இடத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

சிறுவயதில் இருந்து பல வீரர்கள் பயிற்சி பெற்ற வருகின்றனர். எனவே அடிப்படை வசதிகளுடன் கூடிய இடத்தை விரிவாக்கம் செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். அதேபோல் இந்த இடத்தை சரி செய்து கொடுத்தால் இன்னும் நிறைய பேரை உருவாக்க முயற்சி செய்வோம்" என்று பாஷா தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஆசிய சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் ஆக்கி அணி! சீனாவை வீழ்த்தி 3வது முறை சாம்பியன்!

ABOUT THE AUTHOR

...view details