சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை குறித்து திமுக அரசுக்கு எதிராக முகநூல் பக்கத்தில் "மானங்கெட்ட திமுக அரசு" என்று கருத்து பதிவிட்ட காவலர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, அண்ணா பல்கலைக் கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவி புகார் தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியானது முதல் கைதான ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் என எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருவதென இந்த சம்பவம் நாளுக்குநாள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பல்வேறு கட்சிகள் இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு ஆர்பாட்டங்களையம், கண்டனங்களையம் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வேலூர் மாவட்டம், வேலூர் தாலுக்கா காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் அன்பரசன். இவர் அவருடைய முகநூல் பக்கத்தில், அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரம் தொடர்பாக, திமுக அரசுக்கு எதிரான கருத்து பதிவு ஒன்றுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கமெண்ட் ("மானங்கெட்ட திமுக அரசு") செய்துள்ளார்.
இதையும் படிங்க: நேற்று டிஐஜி வருண்குமார் பேட்டி.. இன்று போராட்டம் நடத்திய சீமான் கைது... நாதகவில் பரபரப்பு!
இந்த தகவல் அறிந்த மாவட்ட காவல் துறையினர் காவலர் அன்பரசனிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், கருத்து பதிவு செய்யப்பட்டது உறுதியானதை அடுத்து, அன்பரசனை உடனடியாக தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.
இது சீருடை பணி விதிமுறைகளுக்கு எதிரானது என்ற அடிப்படையில், அன்பரசன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து முகநூல் பக்கத்திலிருந்த பதிவும் நீக்கப்பட்டது.
அண்ணா பல்கலை. விவகாரம் நாளுக்குநாள் பூதாகரமாகி வருகிறது. மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டிக்கும் விதமாக இன்று (டிச.31) நாம் தமிழர் கட்சியினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட முயன்ற கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்ட களத்திற்கு வந்த உடனேயே கைது செய்யப்பட்டு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவம் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல நேற்றைய தினம் தவெக-வினர் சென்னையில் கைதாகினர். அவர்களை காண வந்த கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் கைது செய்யப்பட்டார். சில மணி நேரம் கழித்து காவல்துறையினர் அவர்களை விடுதலை செய்து அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.