தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மீண்டும் தேடி வரும் கேப்டன் பதவி! விராட் கோலியின் முடிவு என்ன?

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் விராட் கோலியை நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Etv Bharat
Virat Kohli (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : 4 hours ago

ஐதராபாத்: 2025ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான தக்கவைப்பு வீரர்கள் பட்டியலை நாளைக்குள் (அக்.31) வெளியிட அணி நிர்வாகங்களுக்கு பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஒவ்வொரு அணி நிர்வாகமும் வீரர்களை தக்கவைப்பது மற்றும் கழற்றிவிடுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.

அதன்படி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விராட் கோலியை மீண்டும் கேப்டனாக நியமிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் பரவி வருகிறது. ரிடென்ஷன் பட்டியல் தொடர்பான ஆலோசனையின் போது ஆர்சிபி அணியின் உரிமையாளர்கள் விராட் கோலியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

17 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் பெங்களூரு அணி, ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. கடந்த சீசனில் முதல் பாதியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், 2வது பாதியில் அபாரமாக விளையாடி பிளே ஆப் சுற்றுக்கு சென்றது. பயிற்சியாளராக ஆண்டி பிளவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முறை பெங்களூரு அணியின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

குறிப்பாக ரீடென்ஷனில் பெங்களூரு அணி எப்படி செயல்படும் என்று பலரும் எதிர்பார்த்துள்ளனர். அந்த வகையில் நட்சத்திர வீரர் விராட் கோலி ரூ.18 கோடிக்கு ரீடெய்ன் செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதேபோல் பெங்களூரு அணியின் கேப்டனாக இருக்கும் டூ பிளசிஸ் 40 வயதை எட்டி இருப்பதால், புதிய கேப்டனை தேடும் பணியில் அணி நிர்வாகம் உறுதியாக இருக்கிறது.

ஆனால் புதிய கேப்டனை கொண்டு வரப்படுவதை விட, அந்த பொறுப்புக்கு விராட் கோலியை நியமிக்க அணி நிர்வாகம் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த 2013 முதல் 2021ஆம் ஆண்டு வரை பெங்களூரு அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி, 140 போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்று 66 போட்டிகளில் வெற்றியும், 70 போட்டிகளில் தோல்வியையும் அடைந்துள்ளார்.

கடந்த சீசனில் டூ பிளசிஸ்க்கு காய்ச்சல் ஏற்பட்ட போது 2 போட்டிகளில் விராட் கோலி கேப்டனாக கம்பேக் கொடுத்தார். அந்த 2 போட்டிகளிலும் பெங்களூரு அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதேபோல் விராட் கோலிக்கு 35 வயதாகுவதால், இளம் வீரர் ஒருவரை கேப்டனாக கொண்டு வந்தால், அவரை கையாள்வது எளிதாக இருக்காது என்றும் இதனால் விராட் கோலியிடம் கேப்டன்சியை ஏற்குமாறும் அணி நிர்வாகிகள் கூறியதாக சொல்லப்படுகிறது.

அதனை விராட் கோலியும் ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விராட் கோலி மீண்டும் கேப்டனாக கம்பேக் கொடுக்கும் பட்சத்தில், அந்த அணி கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் டெல்லி அணியில் இருந்து ரிஷப் பன்ட், லக்னோ அணியில் இருந்து கே.எல்.ராகுல் ஆகியோரையும் ஏலத்தில் எடுக்க பெங்களுரூ அணி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:நம்பர் 1 இடத்தை இழந்த இந்திய வீரர்! தலைகீழாக மாறிய டெஸ்ட் தரவரிசை!

ABOUT THE AUTHOR

...view details