ஐதராபாத்: 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விடுவிக்கப்பட்டு உள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்கள் அணிக்கு கோப்பை வென்று தந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை நீக்கியது ஏன்? என்ற அதிர்ச்சி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இதன் மூலம், ஸ்ரேயாஸ் ஐயர் ஏலத்தில் பங்கேற்க இருப்பதும் உறுதியாகி இருக்கிறது.
ஆனால், தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி வெங்கி மைசூர், இது பற்றி விளக்கம் அளித்து இருக்கிறார். ஸ்ரேயாஸ் ஐயரை தாங்கள் நீக்கவில்லை என்றும், அவர் தனது சந்தை மதிப்பை அறிய ஏலத்தில் பங்கேற்க விரும்பினார் என்றும் கூறி இருக்கிறார்.
இது பற்றி வெங்கி மைசூர் பேசுகையில், "எங்கள் அணியின் தக்க வைப்பு வீரர்கள் பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர் முதல் இடத்தில் இருந்தார். ஒரு அணி மட்டுமே எந்தெந்த வீரர்களை தக்க வைக்கலாம் என்று முடிவை எடுக்க முடியாது. அந்த வீரர் அணியில் நீடிக்க விரும்புகிறாரா? என்பதையும் பார்க்க வேண்டும்.
மேலும், எங்கள் பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர் முதல் இடத்தில் இருந்தார். அவர் தான் எங்கள் அணியின் கேப்டனாகவும் இருந்தார். அவர் கேப்டனாக இருக்க வேண்டும் என்பதால் தான் அவரை நாங்கள் 2022ல் வாங்கினோம். ஆனால், சில விஷயங்கள் நமது கட்டுப்பாட்டில் இல்லை. ஒரு வீரர் தனது சந்தை மதிப்பை அறிய விரும்பினால் ஏலத்தில் பங்கேற்பது சரியான விஷயமாக இருக்கும்.