சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் ரூ.7.79 கோடி மதிப்பில் கோபாலபுரத்தில் கட்டப்பட்டு வரும் பாக்சிங் அகாடமி கட்டுமான பணிகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
கோபாலபுரத்தில் உலகத்தரம் வாய்ந்த குத்துச்சண்டை அகடெமிக்கு 2023 ஆண்டு நவம்பர் மாதம் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். இறுகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சர்வதேச தரத்தில் 790 இருக்கைகள் மற்றும் அதிநவீன வசதிகள் இடம் பெற்றுள்ள கோபாலபுரம் பாக்சிங் அகாடமியின், இறுதிகட்ட பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

ஆய்வின் போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது:
பள்ளிகல்வி துறைக்கு நிதி வழங்காமல் மத்திய அரசு, மாநிலத்தின் மீது நிகழ்த்தி இருக்கக் கூடிய மிகப்பெரிய கொடுமை. நாம் செலுத்துகின்ற வரிப் பணத்தில் இருந்து தான் கேட்கிறோம். மற்ற மாநிலங்களுக்கு நிதி கொடுத்தது போக நமக்கு கிடைக்க வேண்டிய நிதியை மற்ற மாநிலங்களுக்கு பிரித்து கொடுத்துள்ளனர். நாம் எப்பொழுதும் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது. இருமொழி கொள்கை தான் என்பதை முதலமைச்சரும் தெரிவித்துவிட்டார்.

நிதி வழங்காதது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். முதலமைச்சரிடம் இது குறித்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். மத்திய அரசு தமிழகத்திற்கு இதுவரை எந்த நிதியும் ஒதுக்கவில்லை. பட்ஜெட் உரையிலும் தமிழகத்தின் பெயரைக் கூட தவிர்த்து விட்டனர். பெஞ்சல் புயல் பாதிப்பிற்கு ரூ.6500 கோடி கேட்டிருந்தோம். ஆனால் ரூ.600 கோடி மட்டுமே கொடுத்தனர். அதுவும் பெஞ்சல் புயல் பாதிப்பிற்கு கொடுக்காமல் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கொடுத்தனர். மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதையெல்லாம் தமிழக மக்கள் பார்த்துக்கொண்டு உள்ளனர். அவர்களுக்கு எப்பொழுது பதிலடி கொடுக்க வேண்டுமோ அப்பொழுது கொடுப்பார்கள்.

இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். அப்போது, நாடாளுமன்ற மத்திய சென்னை உறுப்பினர் தயாநிதி மாறன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.