சென்னை: சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 55-வது ஆண்டு கொண்டாட்ட விழா இன்று (பிப்ரவரி 17) நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் மக்கள் நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துக் கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, “தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளி கல்வித்துறையை மேம்படுத்த அதன் வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்களை தொடர்ச்சியாக செயல்படுத்தி வருகிறார். புதுமை பெண் திட்டம் மூலம் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் இந்த ஆண்டும் 8 லட்சம் பெண்கள் பெறுகிறார்கள்.
2 ஆயிரத்து 553 மருத்துவ காலிப் பணியிடங்களுக்கு கடந்த ஜனவரி 5 ஆம் தேதி முடிவு வெளியானது. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். தேவையான காலிப் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. தற்போது 2 ஆயிரத்து 642 பேரை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இடஒதுக்கீடுகள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. வரும் 21 ஆம் தேதிக்கு பிறகு இவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்படும். இந்தியாவின் முதன்முறையாக அரசு மருத்துவர்கள் பணியில் சேர்வதற்கான இடத்தை தேர்வு செய்ய கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. 10 நாட்களுக்குள் பணி ஆணைகள் வழங்கப்படும். தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு மருத்துவப் பணியிடங்கள் காலி இல்லை என்ற நிலை உருவாக இருக்கிறது.
கடந்த ஆண்டு 1,021 மருத்துவர்களை, ஓராண்டு காலம் அதிக காலிப்பணியிடங்கள் உள்ள மாவட்டங்களுக்கு இடம் மாறுதல் இல்லாமல் பணியாற்ற வேண்டும் என கலந்தாய்வு நடத்தி பணி அமர்த்தினோம். அவர்களுக்கும் பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இவர்களுக்கு வரும் 20 ஆம் தேதி பணி ஆணை வழங்க உள்ளோம்” இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
சைதாப்பேட்டை சென்னை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 55 ஆவது ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது #Masubramanian #TNHealthminister #DMK4TN pic.twitter.com/6ZuB6PPW97
— Subramanian.Ma (@Subramanian_ma) February 17, 2025
தொடர்ந்து, மும்மொழி கொள்கை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சரை நான் நன்றாக அறிவேன். நீட் தேர்வு சம்பந்தமாக நான் அவரை நேரில் சந்தித்த போது, ஒடிசா மாநில மக்கள் நீட் தேர்வை விரும்பவில்லை என என்னிடம் கூறினார். அந்த மக்களும் விரும்பாத நீட் தேர்வை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. எனவே, அவர் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் தமிழகத்திற்கான நிதியை தருவேன் என அடம்பிடிப்பது மத்திய அமைச்சருக்கு அழகான நடவடிக்கையாக இருக்காது” என்றார்.