சென்னை:சென்னை தீவுத்திடலைச் சுற்றி ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை விதிக்கக் கோரி, பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாத் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் தலைமையிலான அமர்வு, பந்தயத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
அதேபோல், கார் பந்தயங்களுக்கு அனுமதி வழங்கும் சர்வதேச அமைப்பான எப்.ஐ.ஏ. சான்றிதழை பந்தயம் நடத்தப்படும் தினத்தில் 12 மணிக்குள் பெற வேண்டும் எனவும், அதன் நகலை மனுதாரருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், எப்.ஐ.ஏ. சான்று பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி அரசுத் தரப்பில் மனு அளிக்கப்பட்ட நிலையில், அந்த மனு மீதான விசாரணை இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.
ஆனால், சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பின் (FIA) அனுமதியை பெற்றபின் தான் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்த முடியும். சென்னை இரவு நேர கார் பந்தயத்திற்கான சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பின் (FIA) சான்றிதழைப் பெற முடியவில்லை. இதனால் கார் பந்தயம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காலை 11.30 மணிக்கு கார் பந்தயம் நடைபெறும் சாலையில் ஆய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஆய்வும் இதுவரை நடைபெறவில்லை. ஆய்வு முடிந்த பிறகு தான் பயிற்சியும் நடைபெறும், அதன்பின் தான் போட்டி தொடங்கும், ஆனால் இதுவரை எதுவும் நடைபெறவில்லை.
போட்டி நடைபெற தாமதம் ஏற்படுவதால் போட்டி நடைபெறும் இடத்திற்கு வந்து காத்திருந்த சர்வதேச ட்ரைவர்கள் தங்களின் அறைக்கே திரும்பிச் சென்றுள்ளனர். இந்த போட்டியின் முதல் சுற்று கடந்த ஆகஸ்ட் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் சென்னையை அடுத்த இருங்காட்டு கோட்டையில் நடைபெற்றது.