சென்னை: விளையாட்டு உலகின் திருவிழா என்று அழைக்கப்படும் 33வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நாளை தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இதில் தடகள போட்டிகளில் இந்தியாவைச் சார்ந்த 29 பேர் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிலையில், தொடர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய அணி சார்பில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர்களான ராஜேஷ் ரமேஷ் மற்றும் சந்தோஷ்குமார் தமிழரசன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
ராஜேஷ் ரமேஷ்: இந்திய தடகள வீரரான ராஜேஷ் ரமேஷ் (24) திருவாரூர் மாவட்டம் பேரளத்தைச் சேர்ந்த அன்பழகன் - தமிழ்ச்செல்வி தம்பதியின் மூத்த மகனாக பிறந்தார். சிறு வயது முதல் ஓட்டப் பந்தயத்தில் ஆர்வம் கொண்ட ராஜேஷ் ரமேஷ், 6ஆம் வகுப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் முடித்தபிறகு, பள்ளி பருவத்தில் தடகளத்தில் சிறந்து விளங்கியதால் திருச்சியில் உள்ள விளையாட்டு விடுதிக்கு தேர்வாகி, 7-ம் வகுப்பு முதல் விளையாட்டு விடுதியில் தங்கி தனது பள்ளி படிப்பை முடித்தார்.
400 மீட்டர் ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டப்பந்தயம் போன்றவற்றில் பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ள ராஜேஷ் ரமேஷ், திருச்சியில் ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். 2018ல் நடைபெற்ற U20 உலக சாம்பியன்ஷிப்பில் 400மீ தொடர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்று வெண்கல பதக்கத்தை வென்றார். அடுத்ததாக, ராஞ்சியில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பையில் அவர் குறிப்பிடத்தக்க திறமையை வெளிப்படுத்தியது மட்டுமின்றி, 400 மீட்டர் அரையிறுதியில் பந்தய தூரத்தை 46.17 வினாடிகளில் கடந்து ஆசிய சாதனையை படைத்தார்.
2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலப்பு 4 × 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், ஆண்கள் 4 × 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் தங்க பதக்கமும் வென்று அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். அதன் பிறகு பல்வேறு தடகள போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றுள்ளார். இவ்வாறு பல்வேறு பதக்கங்களை குவித்து சாதனை படைத்த ராஜேஷ் ரமேஷ், பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்க அறுவடையை தொடர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.