சென்னை:தேசிய, சர்வதேச அளவில் விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் விதமாக 2 ஆண்டுகால ஒப்பந்தத்துடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சிறப்பு உதவித் தொகை வழங்கி வருகிறது. இதற்காக விண்ணப்பித்தவர்களில் சிறந்த 6 நபர்களைத் தேர்வு செய்து, அவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ரூ.30 லட்சம் நிதியுதவி:அதில் மாரியப்பன் தங்கவேலு, ராஜேஷ் ரமேஷ், வித்யா ராமராஜ் மற்றும் துளசிமதி முருகேசன், பிருத்விராஜ் தொண்டைமான், வைஷாலி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் செஸ் வீராங்கனை வைஷாலியைத் தவிர மற்ற அனைவரும் ஒலிம்பிக் மற்றும் பாரலிம்பிக்ஸ் ஆகிய தொடர்களில் பங்கேற்றவர்கள் ஆவர். இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு வீரருக்கும், அவர்களின் பயிற்சி மற்றும் உபகரணத் தேவைகளுக்காக ஆண்டுக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது.
மாரியப்பன் தங்கவேலு:சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, ரியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். அதன்பிறகு, 2020ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இவ்வாறாக பல்வேறு சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்று குவித்துள்ளார்.
ராஜேஷ் ரமேஷ்:திருவாரூர் மாவட்டம், பேரளத்தைச் சேர்ந்த இந்திய தடகள வீரர் ராஜேஷ் ரமேஷ் (24). இவர் U20 உலக சாம்பியன்ஷிப், ஃபெடரேஷன் கோப்பை உள்ளிட்ட பல போட்டிகளில் பங்கேற்று தங்கள் வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
வித்யா ராம்ராஜ்:கோயம்புத்தூரைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ், 3 முறை தேசிய பட்டத்தை வென்றுள்ளார். மேலும் சர்வதேச போட்டிகளிலும் பதக்கங்களைக் குவித்துள்ளார்.