பார்படாஸ்:அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் இன்று மோதின. வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 8 சுற்றில் முன்னதாக இங்கிலாந்து அணியுடன் அடைந்த தோல்வியால் இந்த போட்டியில் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோமன் பவல் பவுலிங்கை தேர்வு செய்து அமெரிக்காவை பேட்டிங் செய்ய அழைத்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா அணிக்கு ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே ஸ்டீவன் டெய்லர் 2 ரன்களில் ரஸல் வேகத்தில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஆடிய கவுஸ் 29 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய என்ஆர் குமார் 20 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார்.
இதனைத்தொடர்ந்து கேப்டன் ஜோன்ஸ்(11), ஆண்டர்சன்(7) உள்ளிட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரியத் தொடங்கின. இறுதியில் அமெரிக்கா அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ரஸல், சேஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகளும் சாய்தனர்.
இதன்பின் 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சாய் ஹோப் அதிரடியான துவக்கம் தந்தார். 39 பந்துகளில் 6 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடித்து 82 ரன்கள் குவித்த ஹோப் கடைசிவரை நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தார். சார்லஸ்(15) விக்கெட்டுக்கு பிறகு இறங்கிய பூரன் 12 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். வெஸ்ட் இண்டீஸ் 10.5 ஒவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 130 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் குரூப் 2ல் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.
இதையும் படிங்க: கம்மின்ஸ் ஹாட்ரிக் எடுத்து அசத்தல்! 17 வருடங்களுக்கு பிறகு பிரட் லீயின் சாதனை சமன்!