ஹைதராபாத்:இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வரும் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இதனையடுத்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ரோஹித் சர்மா:இது குறித்து ரோஹித் சர்மா கூறுகையில் "விளையாட்டில் இருக்கும் விராட் கோலியின் பசியும் ஆர்வமும் தீவிரமும் ஈடு செய்ய முடியாது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அனுபவம் வாய்ந்த அவர் இந்திய அணிக்காக அவர் நிறையப் போட்டிகளை விளையாடியிருக்கிறார்.
களத்தில் இறங்கினால் மட்டும் போதாது, நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள், உங்களின் அனுபவம், மற்றும் களத்தின் சூழலுக்கு ஏற்ப விளையாட வேண்டும். இதைச் செய்வதில் கோலி நிபுணர். ஒவ்வொரு முறையும் அவர் விளையாடும் போது தனது விளையாட்டை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார். அவருடைய எதிர்காலம் சிறப்பானதாக அமைய என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோன் என தெரிவித்துள்ளார்.
கவுதம் கம்பீர்:தொடர்ந்து இந்தியா கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறுகையில், இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் விராட் கோலி அறிமுகமான போது, அவர் சீக்கிரம் விக்கெட் இழந்து வெளியேறினார்.
இருப்பினும் அவர் நெட்ஸில் (nets) பேட்டிங் செய்த விதம், அவர் நீண்ட காலம் நாட்டுக்காக விளையாடுவர் வீரர் என்பதை நாங்கள் அறிந்தோம். சர்வதேச கிரிக்கெட்டில் 16 ஆண்டுகள் அவர் நிறைவு செய்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
காரணம் அவர் ஒரு சிறந்த வீரர். அணியின் வெற்றிக்காகக் களத்தில் எப்படிப் போராட வேண்டும் என்பது அவருக்கு நன்றகவே தெரியும். ஆரம்ப காலகட்டத்தில் அவர் விளையாடிய விதம், அணியை வழிநடத்தும் அளவிற்கு அவரை கொண்டு சென்றது என்றார்.
2008 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் முதல் முறையாக சர்வதேச போட்டியில் களமிறங்கினார் விராட் கோலி. அன்று ஆரம்பித்த கோலியின் கிரிக்கெட் பயணம், பல்வேறு சவால்களை கடந்து இன்று 16 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது.
இந்த 16 ஆண்டுகளில் நடைபெற்ற ஐசிசி தொடர்களில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையையும், அதிக ஐசிசி விருதுகள் வென்ற வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்று இருக்கிறார். அதே போல் சர்வதேச கிரிக்கெட்டில் 533 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி இதுவரை 26,942 ரன்கள் குவித்துள்ளார். இதில், 50 ஒருநாள் கிரிக்கெட் சதம், 29 டெஸ் சதம் மற்றும் ஒரு டி20 கிரிக்கெட் சதம் உள்பட மொத்தமாக 80 சதங்கள் அடித்து வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க:வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து மனம் திறந்த மனு பாக்கர் சிறப்பு பேட்டி!