பிரான்ஸ்:பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் நடந்த ரவுன்ட் ஆப் 16 சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஜப்பான் வீராங்கனை சுசய் யுய் (Susai Yui) எதிர்கொண்டார். நடப்பு ஒலிம்பிக் சாம்பியனும் உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீராங்கனையுமான சுசய் யுயிடம் தொடக்கத்தில் வினேஷ் போகத் பொறுமையான ஆட்டத்தை கையாண்டார்.
தொடர்ந்து தடுப்பு ஆட்டத்தில் விளையாடிய வினேஷ் போகத் அடுத்தடுத்து இரண்டு புள்ளிகளை இழந்து பின்தங்கினார். இதனால் தனது கிடுக்குபிடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வினேஷ் போகத் ஜப்பான் வீராங்கனையை கலங்கடித்தார். அடுத்தடுத்த அபார முயற்சிகளால் வினேஷ் போகத் 20 விநாடிகளில் ஜப்பான் வீராங்கனையை சரணாகதி அடையச் செய்தார்.
இறுதியில் ஜப்பான் வீராங்கனையை 3-க்கு 2 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு வினேஷ் போகத் தகுதி பெற்றார். ஜப்பான் வீராங்கனை சுசாகி டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு புள்ளி கூட விடாமல் தங்கம் வென்று இருந்தார். கடந்த 2010ஆம் ஆண்டு முதல் மல்யுத்தம் போட்டியில் விளையாடி வரும் சுசாகி இதுவரை 5 போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளார்,
மேலு 2017, 2019, 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்க பதக்கங்களை வென்றார். தோல்வியே தழுவாத ஜப்பான் வீராங்கனையை வினேஷ் போகத் அதிரடியாக வீழ்த்தி புது சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து இதே எடைப் பிரிவில் கால் இறுதி ஆட்டத்தில் உக்ரைனை சேர்ந்த ஒக்ஸானா லிவாச் என்பவரை எதிர்கொண்டார். இந்த முறை தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த வினேஷ் போகத், உக்ரைன் வீராங்கனைக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.
இதனால் போட்டி 3-க்கு 0 என்ற கணக்கில் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருந்தது. இதனிடையே தடுப்பு ஆட்டத்தில் விளையாடி வந்த உக்ரைன் வீராங்கனை ஒக்ஸானா லிவாச் தனது சீரிய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் போட்டியில் அனல் பறந்தது, அடுத்தடுத்து இருவரும் கோதாவில் ஈடுபட்டதால் ஆட்டத்தில் சுவாரஸ்யம் தொற்றுக் கொண்டது. இறுதியில் உக்ரைன் வீராங்கனையை 7-க்கு 5 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.
வினேஷ் போகத்திடம் தோல்வியை தழுவிய உக்ரைன் வீராங்கனை ஒக்ஸானா லிவாச், 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 50 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றவர். அதேபோல் 2019 ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் தங்கமுன் வென்று உள்ளார்.
இதையும் படிங்க:ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு தகுதி! - Paris Olympics 2024