மும்பை: ஐபிஎல் தொடரின் 51வது லீக் ஆட்டம் இன்று (மே 3) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்தது. ஆனால், அந்த அணியில் நல்ல தொடக்கத்தை கொடுக்க முடியவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் துஷாரா அடுத்தடுத்து விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார். பிலிப் சால்ட் 5, ரகுவன்சி 13, ஷ்ரேயாஸ் ஐயர் 6 ரன்கள் என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதன்பின் வந்த ரிங்கு சிங் 9 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து சுனில் நரைனும் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 57 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த கொல்கத்தா அணியை வெங்கடேஷ் ஐயர் - மனீஷ் பாண்டே கூட்டணி மீட்டது.
களத்தில் இறங்கியது முதலே நிதானத்தை கடைபிடித்த வெங்கடேஷ் ஐயர், அவ்வப்போது பவுண்டரிகள், சிக்சர்கள் அடித்து அணிக்கு ரன்களைச் சேர்த்தார். மறுபக்கம், இம்பேக்ட் பிளேயராக களம் புகுந்த மனீஷ் பாண்டேவும் சிறப்பாகவே விளையாடினார். ஒருகட்டத்தில் மனீஷ் பாண்டே 42 ரன்களில் ஆட்டமிழக்க, அதன் பின்னர் ரசல் 7, ரமந்தீப் சிங் 2, ஸ்டார்க் 0 என அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர்.
இறுதியில் வெங்கடேஷ் ஐயரும் 70 ரன்களில் ஆட்டமிழக்க, கொல்கத்தா அணியும் 169 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மும்பை அணி சார்பில் பும்ரா மற்றும் நுவன் துஷாரா தலா 3 விக்கெட்களும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்களும், சாவ்லா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து, மும்பை அணி 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகின்றனர்.
இதையும் படிங்க:சர்வதேச கிரிக்கெட் தரவரிசை: ஒருநாள், டி20 தொடர்ந்து இந்தியா முதலிடம்! ஆனா டெஸ்ட் கிரிக்கெட்ல..? - ICC Rankings