கயானா:20 அணிகள் பங்கேற்று நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 18வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியானான வெஸ்ட் இண்டீஸ் - உகாண்டா அணிகள் மோதின.
கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோவ்மேன் பவல் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் படி தொடக்க ஆட்டக்காரர்களாக பிரண்டன் கிங் மற்றும் ஜான்சன் சார்லஸ் ஆகியோர் களமிறங்கினர்.
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் பிரண்டன் கிங் 13 ரன்களுக்கு வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 3 சிக்ஸர்கள் விளாசி அதிரடி காட்டிய நிலையில் 22 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார்.
மறுபுறம் நிதனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சார்லஸ் 44 ரன்கள் விளாசி இருந்தநிலையில் தினேஷ் நக்ரானி வீசிய பந்தில் அல்பேஷ் ரம்ஜானியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ரோவ்மேன் பவல் 23 ரன்களுக்கும், ரூதர்ஃபோர்ட் 22 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார்.