ப்ளூம்ஃபோன்டைன்: 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று (ஜன.19) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இத்தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட மொத்தம் 16 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்த நிலையில், இன்று (ஜன.20) நடைபெற்ற போட்டிகளின் ஒரு போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஓரளவு நல்ல ஆட்டத்தை கொடுத்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 251 ரன்கள் சேர்த்தது.
அதிகபட்சமாக தொடக்க வீரர் ஆதர்ஷ் சிங் 76 ரன்களும், அணியின் கேப்டன் உதய் சஹாரன் 64 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், அணிக்கு கெளரவமான ரன்களை இந்த கூட்டணியே பெற்று தந்தது. அதேபோல் வங்கதேச அணியின் பந்து வீச்சில் மருஃப் மிருதா 5 ஹால்கலை எடுத்து அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து 252 ரன்கள் இலக்கை துரத்தும் நோக்குடன் களம் கண்ட வங்கதேசம் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அரிஃபுல் இஸ்லாம் மற்றும் முகமது ஷிஹாப் ஜேம்ஸை தவிர மற்ற வீரர்கள் எவரும் சோபிக்கவில்லை. இதனால் அந்த அணி 167 ரன்களுக்கே அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
இந்திய அணியின் சார்பில் இடது கை சுழற்பந்து வீச்சாளரான சௌமி பாண்டே 4 விக்கெட்களை கைப்பற்றினார். அதேபோல் முஷீர் கான் 2 விக்கெட்களையும், ராஜ் லிம்பானி, அர்ஷின் குல்கர்னி மற்றும் பிரியன்ஷு மோலியா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன் காரணமாக இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அடுத்த ஆட்டமாக இந்திய அணி வரும் 25ஆம் தேதி அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. மேலும், இன்று (ஜன.20) நடைபெற்ற மற்ற போட்டிகளில் இங்கிலாந்து அணி ஸ்காட்லாந்து அணியையும், பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் அணியையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சானியா மிர்சா திருமண முறிவு? சோயிப் மாலிக் 3வது திருமணம்!