டெல்லி: ஊக்க மருந்து தடுப்பு விதிகளை மீறியதாக இந்திய பாராலிம்பிக் பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத்துக்கு 18 மாதங்கள் தடை விதித்து சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் உத்தரவிட்டுள்ளது. இதனால் விரைவில் தொடங்க உள்ள பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் அவர் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
12 மாதங்களில் பிரமோத் பகத்தின் ஊக்க மருந்து சோதனை மூன்று முறை தோல்வி அடைந்த நிலையில், அவர் ஊக்க மருந்து தடுப்பு விதிகளை மீறியதை கடந்த மார்ச் 1ஆம் தேதி விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தின் ஊக்க மருந்து தடுப்பு பிரிவு கண்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மார்ச் மாதம் 1ஆம் தேதி ஊக்க மருந்து தடுப்பு சோதனையை எதிர்த்து பிரமோத் பகத் தாக்கல் செய்த மனுவை சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் கடந்த ஜூலை 29ஆம் தேதி நிராகரித்தது. இந்நிலையில், அவர் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள 18 மாதங்கள் தடை விதித்து சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் அறிவித்து உள்ளது.
இதனால் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் தொடங்கும் பாரீஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் பிரமோத் பகத் கலந்து கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2020 டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் பிரமோத் பகத் பேட்மிண்டின் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
35 வயதான பிரமோத் பகத் கடந்த 2020 டோக்கியோ பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டின் இறுதி போட்டியில் கிரேட் பிரிட்டனை சேர்ந்த டேனியல் பெத்தல் என்பவரை வீழ்த்தி தங்கம் வென்றார். ஏறத்தாழ 40 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில் பிரமோத் பகத் 14-க்கு 21, 21-க்கு 15, 21-க்கு 15 என்ற செட் கணக்கில் பிரிட்டன் வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
இதுவரை நான்கு முறை உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று உள்ளார். 2015, 2019 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து சாம்பியன் பட்டம் வென்ற பிரமோத் பகத், 2013ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் இரட்டையர் பிரிவிலும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நூலிழையில் பறி போன 6 பதக்கம்! ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் செய்ததும், செய்யத் தவறியதும்..! - paris olympics 2024