திண்டுக்கல்:டிஎன்பிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில் குவாலிஃபையர் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான லைகா கோவை கிங்ஸ் அணி - திருப்பூர் தமிழன்ஸ் அணியை எதிர் கொண்டது.
திண்டுக்கல்லில் உள்ள நத்தம் என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய திருப்பூர் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்களை குவித்தது.
இதில் அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க வீரர் அமித் சாத்விக் 42 பந்துகளில் 7 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 67 ரன்களை விளாசினார். அவருக்கு அடுத்தபடியாக துஷார் ரஹேஜா 31 பந்துகளில் 2 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 55 ரன்களும், கடைசி நேரத்தில் முகமது அலி 23 பந்துகளில் 3 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 45 ரன்களை குவித்தார்.
கோவை அணி தரப்பில் ஜாதவேத் சுப்ரமணியன் மற்றும் கேப்டன் ஷாருக்கான் 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கியது கோவை கிங்ஸ் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விக்னேஷ் மற்றும் சுஜய் ஆகியோர் களமிறங்கினர்.
இதில் முதல் பந்திலேயே விக்னேஷ் போல்டாகி வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கினார் நட்சத்திர வீரர் சாய் சுதர்சன். முதல் சில ஓவர்கள் நிதனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்பின் களத்தில் சாய் சுதர்சனின் ஆட்டத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
குறிப்பாகத் திருப்பூர் அணி கேப்டன் கிஷோர் வீசிய 17வது ஓவரில் ஹாட்ரிக் சிக்சரை விளாசி அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து நடராஜன் பந்திலும் சிக்சர் அடித்த சாய் சுதர்சன், 48 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார்.
இதற்கிடையில் சுஜய்(19ரன்), சுரேஷ் குமார் 5 ரன்களுக்கும் விக்கெட் இழந்து வெளியேறினர். இறுதியில் களமிறங்கிய முகிலேஷ் 31 பந்திகளில் 48 ரன்கள் விளாசினார். இதனால் 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்து இலக்கை எட்டிய லைகா கோவை கிங்ஸ், திருப்பூரை வீழ்த்தி 3வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிவரை களத்தில் நின்ற சாய் சுதர்சன் 123 ரன்கள் விளாசினார், இதுதான் டிஎன்பிஎல் கிரிக்கெட் வரலாற்றில் தனிநபரின் அதிகபட்ச ஸ்கோராகும்.
இன்றைய போட்டி:இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி, பாபா அபரஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸை எதிர் கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஆகஸ்ட் 2ஆம் தேதி திருப்பூர் தமிழன்ஸ் அணியை எதிர் கொள்ளும்.
இதையும் படிங்க:பாரீஸ் ஒலிம்பிக் 2024: 5வது நாளில் யார் யாருக்கு போட்டிகள்! முழு விபரம்!