தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

விரைவில் பெண்களுக்கான TNPL போட்டிகள் : TNCA உதவி செயலாளர் கொடுத்த அப்டேட்.! - women TNPL tournament - WOMEN TNPL TOURNAMENT

Women TNPL tournament: இன்னும் இரண்டு ஆண்டுகளில் பெண்களுக்கான டிஎன்பிஎல் (TNPL) போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும், அதற்கான வீராங்கனைகள் தேர்வு செய்யும் பணியை தமிழ்நாடு கிரிக்கெட் தொடங்கியுள்ளது எனவும் டிஎன்சிஏ (TNCA) உதவி செயலாளர் ஆர்.என் பாபா தெரிவித்துள்ளார்.

டிஎன்சிஏ உதவி செயலாளர் ஆர்.என் பாபா
டிஎன்சிஏ உதவி செயலாளர் ஆர்.என் பாபா (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 22, 2024, 6:14 PM IST

திருநெல்வேலி: 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளின் 8வது சீசன் வரும் ஜூலை 5ஆம் தேதி தொடங்குகிறது. இது தொடர்பாக திருநெல்வேலியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், டிஎன்பிஎல் (TNPL) குழு உறுப்பினர் செந்தில்நாதன், நெல்லை மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் சரவண முத்து, எஸ்என்ஜே டிஸ்டலர் நிறுவனத்தின் பொது மேலாளர் பி.எஸ். குமார் மற்றும் TNCA உதவி செயலாளர் ஆர்.என் பாபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டிஎன்சிஏ உதவி செயலாளர் ஆர்.என் பாபா (Credits - ETV Bharat Tamil Nadu)

அப்போது பேசிய, TNCA உதவி செயலாளர் பாபா, "எட்டாவது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் தொடக்க நிகழ்ச்சி வரும் ஜூலை 5ஆம் தேதி சேலத்தில் தொடங்குகிறது. இந்த ஆண்டு இந்தத் தொடர் சேலம், கோவை, திருநெல்வேலி, திண்டுக்கல் மற்றும் சென்னை ஆகிய ஐந்து இடங்களில் நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கத்தில் இரண்டு குவாலிஃபயர்கள் மற்றும் இறுதி போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

இந்த தொடரில் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான அஷ்வின், நடராஜன் உள்ளிட்ட பல வீரர்கள் விளையாட உள்ளனர். கடந்த ஆண்டு நான்கு இடங்களில் போட்டிகள் நடத்தப்பட்ட சூழலில் இந்த ஆண்டு ஐந்து இடங்களில் போட்டிகள் நடத்தப்படுகிறது.

கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் எட்டு அணிகள் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. டிஎன்பிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 50 லட்சமும், இரண்டாவது இடம் பெறும் அணிக்கு பரிசாக 30 லட்சமும், மூன்று மற்றும் நான்காவது இடம் பிடிக்கும் அணிகளுக்கு தலா 20 லட்சமும் பரிசுகளாக வழங்கப்பட உள்ளது.

ஏற்கனவே டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள டிஆர்எஸ் முறை இந்த ஆண்டும் தொடர்கிறது. கடந்த ஆண்டை போலவே நாக் அவுட் சுற்றுகளுக்கு ரெஸ்ட் டே முறையும் நடைமுறையில் இருக்கும். மேலும் வரும் காலங்களில் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அணிகள் அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரை போல ஒவ்வொரு அணியும் இரண்டு முறை ஒரு அணியை எதிர்கொள்ளும் வகையில் போட்டிகள் அமைவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

சர்வதேச தரத்தில் மதுரையில் 16 ஆயிரம் பேர் அமர்ந்து கிரிக்கெட் போட்டிகளை பார்க்கும் வகையில் புதிய மைதானம் உருவாகி வருகிறது. தமிழ்நாடு பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் இரண்டு ஆண்டுகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிகளில் இடம்பெறும் வீராங்கனைகள் தேர்வு செய்யும் பணியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் செய்து வருகிறது. 37 மாவட்டங்களில் உள்ள பெண்கள் அணிகளுக்கு இடையே போட்டிகள் நடத்தப்பட்டு சிறந்த வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். வரும் ஜனவரி மாதம் மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகள் நடத்தப்பட்டு சிறந்த வீராங்கனைகள் தேர்வு செய்து நான்கு அணிகளாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:மார்க்ரம் கேட்ச்சால் திருப்புமுனை... தென் ஆப்பிரிக்கா 7 ரன்களில் அபார வெற்றி! - T20 World Cup 2024

ABOUT THE AUTHOR

...view details