சென்னை: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி, வெண்கலம் வென்ற மாரியப்பன், மனிஷா, நித்ய ஸ்ரீ ஆகியோர் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். வெற்றிப்பெற்ற வீரர்களுக்கு ரூ.5 கோடிக்கான காசோலைகளை வழங்கி பாரட்டினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன், "பாரீஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் வெல்ல ஆசைப்பட்டேன். ஆனால், போட்டிக்கு முந்தைய நாள் ஏற்பட்ட காய்ச்சல் அங்கு நிலவிய காலநிலையால் தங்கம் வெல்ல முடியாமல் போய்விட்டது. 2028ம் ஆண்டு பாராலிம்பிக்ஸ் போட்டியில் கண்டிப்பாக தங்கம் வென்று திரும்புவேன். போட்டி நடைபெறவுள்ள நாட்டின் காலநிலைக்கு ஏற்ப பயிற்சியாளரின் வழிகாட்டுதல்படி உடலை தயார் செய்ய உள்ளேன்.
கடந்த 2016ம் ஆண்டு நான் தங்கம் வென்றபோது நான் ஒருவன் மட்டுமே தமிழக வீரனாக பங்கேற்றேன். முதலமைச்சர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் முயற்சியால், இந்த முறை தமிழகத்திலிருந்து 6 பேர் சென்று 4 பேர் பதக்கம் வென்றுள்ளோம். அரசு எங்களுக்கு எல்லா வகையிலும் ஆதரவாக உள்ளது" என்றார்.