ஐதராபாத்: பாரீஸ் ஒலிம்பிக்கில் தனக்கு வெள்ளிப் பதக்கம் வேண்டும் என்று இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விளையாட்டுக்கான நடுவர் மன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், அதனை விமர்சிக்கும் வகையில் எக்ஸ் தள பதிவை வெளியிட்டுள்ளார் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா.
அதோடு சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள அவர், அந்தப் பதிவில் கையில் தேசியக் கொடியை ஏந்திய வினேஷ் போகத்தை காவல் துறையினரின் அடக்குமுறைக்கு உள்ளாக்குவது போன்ற படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில், "நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த சுதந்திர தின வாழ்த்துக்கள்" என்று பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக அவர் பதிவு செய்த மற்றொரு ட்வீட்டில், "இருள் நேரத்தில் உங்கள் பதக்கம் பறிக்கப்பட்டுள்ளதாக நான் நம்புகிறேன். உலக அளவில் வைரத்தை போல நீங்கள் மின்னுகிறீர்கள். நீங்கள் தேசத்தின் கோஹினூர். பதக்கம் வேண்டுமென விரும்புவோர் அதனை ரூ.15 கொடுத்து பெற்றுக் கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவின் இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை அதிகரித்திருப்பதாக கூறி வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் வினேஷ் போகத்தின் பதக்க கனவு நொறுங்கியது. அவர், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்ததன் மூலம் குறைந்த பட்சம் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றுவதை உறுதி செய்திருந்தார்.