ஹராரே: டி20 உலகக்கோப்பையை இரண்டாவது முறையாக வென்று சாதனை படைத்த இந்திய அணி அடுத்ததாக ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் போட்டி இன்று ஹராரேவில் நடைபெறவுள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கவுள்ளது
கில் தலைமையிலான இந்திய அணி: இத்தொடரில் பங்குபெறும் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட அணியின் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ருதுராஜ் கெய்க்வாட், ரியான் பராக், அபிஷேக் சர்மா, துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த அணிக்கு இடைக்கால பயிற்சியாளராக விவிஎஸ் லஷ்மண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது நடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட முன்னணி வீரர்கள் இந்த தொடரில் விளையாட இருப்பதால், இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மேலும், இப்போட்டியில் துவக்க வீரர்களாக கேப்டன் கில் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி: ஜிம்பாப்வே அணியை பொறுத்தமட்டில் அனுபவ வீரர் சிக்கந்தர் ராசா தலைமை தாங்குகிறார். மேலும், இந்த அணியில் மூத்த வீரர்களான கிரெய்க் எர்வின், ஷான் வில்லியம்ஸ், ரையன் பர்ல் உள்ளிட்டவர்கள் இடம் பெறாமல் இருப்பது பின்னடைவாக கருதப்படுகிறது. அதேபோல், இந்த அணியில் 25 வயது இளம் ஆல்ரவுண்டர் நக்வி அறிமுக வீரராக இடம் பெற்றுள்ளார்.