தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

"சாம்பியன்ஸ் டிராபி விளையாட இந்திய அணி பாகிஸ்தான் பயணம்.. ஆனால்"- ராஜீவ் சுக்லா போடும் புதிர் என்ன? - Champions Trophy cricket 2025 - CHAMPIONS TROPHY CRICKET 2025

மத்திய அரசு அனுமதி அளித்தால் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பின்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடும் என பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.

Etv Bharat
BCCI Vice President Rajeev Shukla (ETV Bharat)

By ETV Bharat Sports Team

Published : Jul 29, 2024, 1:26 PM IST

லக்னோ: உத்தர பிரதேச பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாட பாகிஸ்தான் செல்ல முடியும் என்றும் அதற்கு முன் இந்திய அரசின் சம்மதம் என்பது முக்கியம் என்று ராஜீவ் சுக்லா கூறினார்.

மேலும், 2026 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது இந்தியா வருவதைப் பற்றி பாகிஸ்தான் என்ன வேண்டுமானாலும் கூறலாம் என்றும், ஆனால் இந்திய அரசின் ஒப்புதலுக்காக மட்டுமே பிசிசிஐ காத்திருப்பதாகவும் ராஜீவ் சுக்லா கூறினார். அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதம் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி நடைபெறுவதால் அதில் இந்தியா பங்கேற்குமா என்பது தொடர் கேள்வியாக இருந்து வருகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தானில் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியானது முதல் ஐசிசியிடம், இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பாகிஸ்தானுக்கு பதிலாக வேறொரு நாட்டில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்துமாறும் அல்லது இந்தியா விளையாடும் போட்டிகளை மட்டுமாவது பாகிஸ்தானுக்கு வெளியே பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் என பிசிசிஐ தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதேநேரம், பயணத் தடை காரணமாக இந்திய அணி பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட வர மறுக்கிறதா என்பது குறித்து பிசிசிஐ எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்னர் தெரிவித்து இருந்தது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி கராச்சியில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. மார்ச் 9ஆம் தேதி லாஹூரில் இறுதி போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மழை உள்ளிட்ட பேரிடர் காரணமாக போட்டி தடைபட்டால் மறுநாள் ரிசர்வ் டே ஆக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் ராவல்பிண்டியில் சில ஆட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளன.

இதையும் படிங்க:பாரீஸ் ஒலிம்பிக் 2024: டென்னிசில் முடிவுக்கு வந்த பதக்க வாய்ப்பு! ரோகன் - பாலாஜி அதிர்ச்சி தோல்வி! - Paris Olympics 2024

ABOUT THE AUTHOR

...view details