சென்னை:உஸ்பெகிஸ்தான் நாட்டில் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை சர்வதேச கிக் பாக்சிங் உலகக்கோப்பை போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா உட்பட 81 நாட்களைச் சார்ந்த 2000க்கும் அதிகமான வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் இந்தியா சார்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
8 பதக்கம்இதில் 55 கிலோ ஜூனியர் எடைப்பிரிவு சுபாஷினி 2 தங்கப் பதக்கங்களையும், 47 கிலோ இளையோர் எடைப் பிரிவு அஷ்வின் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். 65 கிலோ லைட் காண்டாக்ட் & கிக் லைட் பிரிவில் ஜிவந்திகா 2 வெண்கலப் பதக்கங்களையும், 42 கிலோ புள்ளி சண்டைப் பிரிவில் தீபலக்சுமி , 50 கிலோ கிக் லைட் பிரிவில் நிவேதா , சீனியர் -94 கிலோ கிக் லைட் பிரிவில் வசீகரன் ஆகியோர் தலா ஒரு வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர்.
உற்சாக வரவேற்பு:முன்னதாக இப்போட்டியில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் 2 லட்சம் வீதம் 11 வீரர் வீராங்கனைகளுக்கு 22 லட்சம் ரூபாயை தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறை சார்பில் வழங்கியுள்ளது. இந்த தொடரில் 2 தங்கம்,1 வெள்ளி, 5 வெண்கலம் என 8 பதக்கங்களை வென்ற தமிழக வீரர்கள் உஸ்பெகிஸ்தானில் இருந்து விமான மூலம் சென்னை வந்தடைந்தனர். அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
குத்துச்சண்டை பயிற்சி மையம் அமைத்து கொடுக்க வேண்டும்:இது குறித்து இரண்டு தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை சுபாஷினி கூறுகையில், "கடந்த நான்கு வருடமாக குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வருகிறேன். நான்கு முறை தேசிய அளவில் பங்கேற்று குத்துச்சண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்று உள்ளேன். அதன் அடிப்படையில் தற்போது குத்துச்சண்டை உலகக்கோப்பை போட்டிக்குத் தேர்வாகி சென்று இரண்டு தங்க பதக்கங்களை வென்று உள்ளேன்.
இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் என அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.குறிப்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக ஊக்கத்தொகை அளித்து எங்களுக்கு உதவி செய்தார்.