சென்னை:ஒன்பதாவது ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் இத்தொடரின் முதல் போட்டியில் இன்று தொடரை நடத்தும் அமெரிக்க அணியும், கனடா அணியும் மோதின. அமெரிக்காவின் டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரேரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆட களமிறங்கிய கனடா அணிக்கு ஆரோன் ஜான்சன் மற்றும் நவ்நீத் தலிவால் ஆகியோர் இணைந்து அதிரடியான தொடக்கத்தை தந்தனர். இருவரும் இணைந்து 43 ரன்கள் குவித்திருந்த நிலையில் ஆரோன் ஜான்சன் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய பர்காத் சிங் 5 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாக 66 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் வலுவான பார்ட்னர்சிப் அமைத்த நவ்நீத் தலிவால் மற்றும் நிக்கோலஸ் கிர்டன் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டு ஸ்கோரை உயர்த்தியது
இப்போட்டியில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த நவ்நீத் தலிவால் டி20 உலகக்கோப்பை தொடரில் கனடா அணிக்காக அரைசதம் கடந்த முதல் வீரர் எனும் சாதனையையும் படைத்தார். 61 ரன்களைச் சேர்த்த நிலையில் நவ்நீத் தலிவால், கோரி ஆண்டர்சன் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
மறுமுனையில் துடிப்பாக ஆடிய நிக்கோலஸ் கிர்டன் 51 ரன்கள் அடித்து அலிகான் பந்தில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் மொவ்வா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் சேர்த்து வலுவான ஸ்கோரை குவிக்க உதவி செய்தார். கனடா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களைக் குவித்தது. அமெரிக்க அணி தரப்பில் கோரி ஆண்டர்சன், அலி கான், ஹர்மீத் சிங் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சற்று கடினமான இலக்குடன் களமிறங்கிய அமெரிக்க அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்களான ஸ்டீவன் டக் அவுட் மற்றும் மொனாக் படேல் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய ஆரோன் ஜோன்ஸ் மற்றும் ஆண்ட்ரிஸ் கஸ் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டு வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றது.ஆரோன் ஜோன்ஸ் 22 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.அவருக்கு துணையாக நின்று ஆடிய ஆண்ட்ரிஸ் கஸ்ஸும் அரைசதம் அடித்து 65 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் ஆரோன் ஜோன்ஸ் தனது அபார ஆட்டத்தால் 40 பந்துகளில் 92 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதன்மூலம் அமெரிக்க அணி 17.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் கனடா அணியை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது.இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க அணி டி20 உலகக்கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. முதல் பேட்டியிலேயே தனது அமெரிக்க அண அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: மறக்க முடியாத 2007 டி20 உலகக் கோப்பை.. ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் என்ன? - ஓர் அலசல்! - T20 World Cup 2024