சென்னை: சென்னையில் மூன்றாவது ஆண்டாக தமிழ்நாடு அரசு நடத்திய பன்னாட்டு புத்தக திருவிழா நிறைவடைந்தது. விழாவில் 1250 மொழி பெயர்ப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
3வது சென்னை பன்னாட்டு புத்தக திருவிழாவினை கடந்த 16ஆம் தேதி நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த புத்தகத் திருவிழாவில் அமெரிக்க, ரஷ்யா பிரான்ஸ், மலேசியா உள்ளிட்ட 64 நாடுகளின் பதிப்பகங்கள் பங்கேற்றன.
தமிழில் உள்ள பல்வேறு இலக்கியங்களை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மொழி பெயர்ப்பாளர்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மொழிபெயர்ப்பாளர்கள் இந்த மூன்று நாள் பன்னாட்டு புத்தக திருவிழாவில் கலந்து கொண்டனர். கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் முறையாக சென்னையில் இந்த சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 24 நாடுகளின் பதிப்பகங்களுடன் தொடங்கியது. கடந்த ஆண்டு நடைபெற்ற பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் 40 நாடுகளின் பதிப்பகங்கள் பங்கேற்றன. இந்த ஆண்டு கூடுதலாக மொத்தம் 64 நாடுகளின் பதிப்பகங்கள் பங்கேற்றன.
இந்த நிலையில் மொழிபெயர்ப்புக்காக மொத்தம் 1250 ஒப்பந்தங்கள் பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் கையெழுத்தாகியுள்ளது. நிறைவு நாளான இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்துகொண்டு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பதிப்பித்த 75 நூல்கள், 2023- 24 ஆகிய ஆண்டுகளில் மானியம் வாயிலாக மொழிபெயர்க்கப்பட்ட 30 நூல்களை வெளியிட்டார். அதனை மக்களவை உறுப்பினர்கள் சசிதரூர், டி ஆர் பாலு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
மேலும், சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா நிறைவு விழாவில், சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா தூதர் விருதினை PWB Global Ambassador, ASEAN Publishing Association, African Publishers Network (APNET), Francophone Ambassador ஆகிய பதிப்பகம் மற்றும் அமைப்பிற்கும், உலகளாவிய தொலைநோக்கு டிஜிட்டல் புத்தக கண்காட்சி சிறப்பு விருதினை ரியாத் புத்தக கண்காட்சிக்கும், பண்டைய தமிழ் இலக்கிய மேம்பாட்டு விருதினை தாமஸ் ஹிடோஷி புருக்ஷிமா (Thomas Hitoshi Pruiksma) மற்றும் பேராசிரியர் டாக்டர் அருள்சிவன் ராஜு ஆகியோருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
#ChennaiInternationalBookFair:
— M.K.Stalin (@mkstalin) January 18, 2025
Bringing the World to Tamil; Taking Tamil to the World" – this one-of-its-kind initiative in india by @tnschoolsedu has set new milestones.
Starting with 365 MoUs in 2023, growing to 752 in 2024, and now reaching 1125 at #CIBF2025 – 1005 for… pic.twitter.com/2YugxwVB81
மேலும், நவீன தமிழ் இலக்கிய மேம்பாட்டு விருதினை கிறிஸ்டியன் வியிஸ் (Christian Weiss) மற்றும் கே.எஸ். வெங்கடாசலம் ஆகியோருக்கும், கூட்டு வெளியீட்டு கூட்டாண்மை விருதினை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பதிப்பகத்திற்கும், பன்னாட்டு மானியக் குழுவின் சிறப்பு விருதினை துருக்கி நாட்டின் TEDA-விற்கும், புத்தக ஊக்குவிப்பு விருதினை மங்கோலியா மேஜிக் பாக்ஸ் மற்றும் இத்தாலி நாட்டின் கியூண்டி ஓடியன் புத்தக விற்பனை நிலையத்திற்கும் (Guinti Odeon Bookshop), உலகளாவிய இலக்கிய ஆதரவிற்கான விருதினை பொலானா குழந்தைகள் புத்தகக் கண்காட்சிக்கும் (Bologna Children’s Book Fair) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். புத்தக திருவிழாவில் கலந்து கொண்ட மொழிபெயர்ப்பாளர்களுக்கான விருதுகளையும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.