டெல்லி: ஐபிஎல் தொடரின் 35வது போட்டி, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் ஹைதராபாத் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ஹைதராபாத் பேட்டிங் செய்தது. வழக்கம் போல் அவர்களது தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் ஹெட் அதிரடி காட்டினர்.
இந்த கூட்டணி ஓவருக்கு 20 ரன்கள் குறையாமல் ரன்களைக் குவித்த வண்ணம் வந்தது. பவர் ப்ளே முடிவில், இந்த கூட்டணி 125 ரன்கள் சேர்த்தது. டி20 வரலாற்றில் ஒரு அணி பவர் ப்ளே முடிவில் 125 ரன்கள் குவித்தது இதுவே முதல்முறை. ஆனால், அடுத்த இரண்டு பந்துகளில் அபிஷேக் சர்மா அக்சர் படேலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து 46 ரன்களில் வெளியேறினார்.
அதன் பின் மார்க்ரம் 1, ஹென்ரிச் கிளாசென் 15 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதை அடுத்து, ஹெட் 86 ரன்கள் அடித்த நிலையில் வெளியேற, டெல்லி அணி சற்று பெருமூச்சு விட்டது. இருப்பினும், இவர்களுக்கு அடுத்து களத்திற்கு வந்த நிதிஷ் ரெட்டி - சபாஷ் அகமத் கூட்டணி ரன்களைச் சேர்த்தது.