ஐதராபாத்:இலங்கை கிரிக்கெட் வீரர் பிரவீன் ஜெயவிக்ரமா ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக ஓராண்டு காலம் அனைத்து வகையிலான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுவதற்காக அவரை அணுகியவர்கள் குறித்து தகவல் அளிக்க தவறியது மற்றும் அதுகுறித்த விசாரணையை தடுக்க முயன்ற காரணங்களுக்காக ஜெயவிக்ரமாவுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சர்வதேச போட்டிகளில் மேட்ச் பிக்சிங் செய்ய ஜெயவிக்ரம அணுகப்பட்டதாகவும், மேலும், 2021ஆம் ஆண்டு லங்கா பிரீமியர் லீக் சீசனில் போட்டிகளை மேட்ச் பிக்சிங் மற்றொரு வீரரை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டதாகவும் ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 26 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் ஜெயவிக்ரமா தான் செய்த ஊழல் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 6 மாதங்களுக்கு உடனடியாக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்ததாகவும் ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் லங்கா பிரீமியர் லீக் போட்டிகளின் போது விதி மீறல் நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இலங்கை அணியில் கடந்த 2021 ஆம் ஆண்டு அறிமுகமான பிரவீன் ஜெயவிக்ரமா வங்கதேசத்திற்கு எதிரான தனது முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதுவரை இலங்கை அணிக்காக தலா ஐந்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் பிரவீன் ஜெயவிக்ரமா விளையாடி உள்ளார். கடைசியாக 2022 ஆம் ஆண்டு ஜெயவிக்ரமா இலங்கை அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Watch: அதிரடி சரவெடி.. ஒரே ஓவரில் 5 சிக்சர்.... லெஜண்ட்ஸ் கிரிக்கெட்டில் மாஸ் காட்டிய மார்டின் கப்தில்! - Martin Guptil