மும்பை: தனது கணவர் நடிகர் சைஃப் அலி கான் பல முறை கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குறித்து நடிகை கரீனா கபூர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள நடிகர் சைஃப் அலி கான் வீட்டிற்குள் நேற்று முன் தினம் அதிகாலை நுழைந்த மர்ம நபர், அங்கு கொள்ளையடிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது நடிகர் சைஃப் அலி கான் தடுக்க முயன்ற போது இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. வீட்டிற்குள் நுழைந்த அந்த மர்ம நபர் நடிகர் சைஃப் அலி கானிடம் ரூ.1 கோடி கேட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிகாலை நேரத்தில் அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் படிக்கட்டு வழியாக நுழைந்த அந்த நபர், டி-சர்ட், ஜீன்ஸ் மற்றும் ஆரஞ்சு நிற ஸ்கார்ஃப் அணிந்திருந்தார். நடிகர் சைஃப் அலி கானிடம் ரூ.1 கோடி கேட்ட போது அவர் கொடுக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த அந்த நபர் சைஃப் அலி கானை தாக்கத் தொடங்கினார். இதில் சைஃப் அலி கானுக்கு கழுத்து மற்றும் கையில் ஆறு இடங்களில் கத்திக்குத்து விழுந்தது.
இந்த நிலையில், சைஃப் அலி கான் மீதான தாக்குதல் குறித்து அவரது மனைவியும், நடிகையுமான கரீனா கபூர் மும்பை போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர், "வீட்டிற்குள் நுழைந்த அந்த மர்ம நபர் மிகவும் கோபமாக இருந்தார். இருந்தாலும், வீட்டில் இருந்த நகை உட்பட எந்த பொருளையும் அவர் திருடவில்லை" என்று கூறினார்.
பாந்த்ரா போலீசாரிடம் கரீனா கபூர் அளித்த வாக்குமூலத்தில், "தாக்குதல் நடத்தியவர் தொடர்ந்து சைஃப்பை எவ்வாறு தாக்கினார்? என்றும் அந்த நபருக்கு வீட்டில் இருந்து திருடும் நோக்கம் இல்லை என்றும் தெரிவித்தார். ஆனால், "தனது இளைய மகன் ஜெவை தாக்க அந்த நபர் முயன்ற போது சைஃப் அலி கான் தடுக்க முயன்ற போது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அதனால், அந்த மர்ம நபரால் ஜெவை நெருங்க முடியவில்லை" என்றும் கரீனா தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
தாக்குதலுக்குப் பிறகு தனது சகோதரி கரிஷ்மா கபூரின் வீட்டிற்குச் சென்றதாக கரீனா போலீசாரிடம் கூறினார். "நான் பயந்துவிட்டேன், அதனால் கரிஷ்மா என்னை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்," என்று கூறினார்.
தாக்குதல் நடத்தியவரைப் பிடிக்க 30க்கும் மேற்பட்ட தனிப்படைகள்
தாக்குதல் நடத்தியவரைப் பிடிக்க 30க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவரை விரைவில் கைது செய்து விடுவதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.
சைஃப் அலி கான் விரைவில் டிஸ்சார்ஜ்
கழுத்தில் இருந்து 2.5 அங்குல கத்தியை அகற்றுவதற்கான வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பிறகு சைஃப் அலி கான் நன்றாக குணமடைந்து வருகிறார். மருத்துவர்களின் கூற்றுப்படி, ஜனவரி 21 ஆம் தேதிக்குள் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார், "அவரது உடல்நிலையை நாங்கள் கவனித்து வருகிறோம், எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அவர் உடல்நிலை குணமடைந்து வருகிறது. இருந்தாலும் ஓய்வு எடுக்குமாறு அவரை அறிவுறுத்தியுள்ளோம், இரண்டு முதல் மூன்று நாட்களில் அவரை டிஸ்சார்ஜ் செய்வோம்," என்று லீலாவதி மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நிதின் டாங்கே வெள்ளிக்கிழமை செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
தாக்குதல் நடத்தியவர் கொள்ளையில் ஆர்வம் காட்டவில்லை என்று கரீனா கபூர் கூறியிருந்தாலும், அந்த மர்ம நபர் பிடிபட்ட பின்னரே தாக்குதலின் நோக்கம் நன்கு அறியப்படும்.