ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் டெல்லி, ருர்கி நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கரமான கார் விபத்தில் படுகாயமடைந்தார். பின்னர் மருத்துவமனையில் இரண்டு மாதங்களுக்கு மேல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த அவர் தற்போது உடல்நலன் தேறி வருகிறார்.
ரிஷப் பண்டின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட இந்த விபத்து குறித்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் மனம் திறந்து பேசியுள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய ரிஷப் பண்ட், “எனக்கு விபத்து ஏற்பட்ட போது இந்த உலகத்தில் எனது வாழ்க்கையே முடிந்துவிட்டது என நினைத்தேன். ஆனால் இந்த பயங்கர விபத்தில் இதைவிட அதிக காயம் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக சுயநினைவுடன் இருக்கக் கூடிய காயங்களுடன் உயிர் தப்பினேன்.
அப்போது என்னை ஒருவர் காப்பாற்றியதை மட்டும் அறிந்திருந்தேன். அதன் பிறகு நான் இந்த காயத்திலிருந்து குணமாக எவ்வளவு காலம் ஆகும் என டாக்டரிடம் கேட்டதற்கு, அவர் 16 முதல் 18 மாதங்கள் ஆகும் என்றார். நான் குணமாக கடினமாக உழைக்க வேண்டும் என்பது மட்டும் எனக்கு தெரிந்தது” எனக் கூறியுள்ளார்.
ரிஷப் பண்ட் பங்கேற்ற அந்த நிகழ்ச்சிக்கான டீசரில், அவர் இந்த விபத்தினால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் எதிர்கொண்ட சவால்கள் குறித்து பேசியுள்ளது இடம்பெற்றுள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியைக் காண மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். ரிஷப் பண்ட் விபத்தில் காயமடைந்த பிறகு இதுவரை ஒரு கிரிக்கெட் போட்டியில் கூட பங்கேற்கவில்லை. இந்நிலையில், வரவுள்ள 2024 ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்குத் திரும்பவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இந்திய அணியில் ராகுல், ஜடேஜா விலகல்! இதுதான் காரணமா? அடித்தது அதிர்ஷ்டம்! சர்ஃபரஸ் கானின் நீண்டநாள் கனவு நிறைவேறுமா?