சென்னை:20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 2ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐ.சி.சி. அறிவித்து இருந்தது.
இதனையடுத்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் உலக கோப்பை போட்டிக்கான தங்களது அணியைஅறிவித்தது. அந்த வகையில் நேற்று ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
இதில் காயத்தில் இருந்து மீண்டு வந்த ரிஷப் பண்ட் மற்றும் பல ஆண்டுகளாக இந்திய அணியின் உலகக் கோப்பையில் இடம் பெற வேண்டும் என போராடிய , சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழகஇடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பளிக்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அதே போல் தமிழ்நாட்டின் தினேஷ் கார்த்திக், அஸ்வின் மற்றும் பேட்டிங்கில் கலக்கிவரும் இளம் வீரரான சாய் சுதர்சன், ஆல் ரவுண்டர்களான சாய் கிஷோர், ஷாருக்கான் உள்ளிட்ட ஒரு தமிழக வீரர் கூட இந்திய அணியில் இடம் பெறாதது பேசு பொருளாகியுள்ளது.
உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் முன்னரே இலங்கை முன்னாள் சுழற்பந்து ஜாம்பவன் முத்தையா முரளிதரன், இந்திய அணியின் முன்னாள் வீரர்களான கிருஷ்ணமாச்சாரி, பத்ரிநாத் உள்ளிட்ட பலரும் நடராஜனுக்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில் நடிகரும், பாஜக பிரமுகரும் சரத்குமார் நடராஜனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது."டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில், சிறந்த வேகப்பந்து வீச்சாளரும், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நடராஜன் பெயர் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது.
வாய்ப்பு இருப்பின் அவரை தேர்வு செய்ய தேர்வுக்குழுவினர் மறுபரிசீலனை செய்யலாம்" என தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் ரன்களை வாரி வழங்கும் பவுலர்களுக்கு மத்தியில் கில்லியாக யாக்கர்கள் வீசி 13 விக்கெட்டுகளை வீழ்த்திய நடராஜன் தேர்வு செய்யப்படாது ஏன்?
என பலரும் தேர்வுக் குழுவை கேள்வி எழுப்பி வருகின்றனர். உலகக் கோப்பை டி20 அணியில் மாற்றம் செய்வதற்கான கால அவகாசம் மே.25ஆம் தேதி வரை உள்ளது. இந்த நிலையில் இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்படுமா? நடராஜன் இந்திய அணியில் இடம் பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க:பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் கனவு சென்னை கையில்.. இன்று சம்பவம் செய்யுமா சிஎஸ்கே!