சென்னை : இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில், நடிகர் பிரபுதேவா, நடிகை மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ள 'ஜாலியோ ஜிம்கானா' திரைப்படம் வருகிற 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
இப்படத்தில் இருந்து வெளியான 'போலீஸ்காரன கட்டிக்கிட்டா' என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. அந்த பாடலை சக்தி சிதம்பரம் எழுதியதாக வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த பாடலை பத்திரிகையாளர் ஜெகன் கவிராஜ் என்பவர் எழுதியுள்ளார் என்றும், எதற்காக அதனை மறைத்து உங்கள் பெயரை போட்டுள்ளீர்கள் என்று செய்தியாளர்கள் சந்திப்பில், சக பத்திரிக்கையாளர்கள் சக்தி சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பினர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் சக்தி சிதம்பரம் பேசும்போது, இதற்கான விளக்கத்தை அளிப்பார் என தயாரிப்பாளர் கூறியதை அடுத்து பத்திரிகையாளர்கள் அமைதியாகினர். ஆனால் சக்தி சிதம்பரம் பேசும்போது பாடல் விவகாரம் குறித்து பேசவில்லை. இதனால் மீண்டும் கேள்வி எழுப்ப தொடங்கினர். இதனை அடுத்து இயக்குநர் சக்தி சிதம்பரம் அரங்கில் இருந்து பாதியிலேயே கிளம்பினார்.
இதையும் படிங்க : "ஜாலியோ ஜிம்கானா எப்படி இருக்கும்?" - மடோனா செபாஸ்டியன் அப்டேட்!
அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ் மேடைக்கு வந்து தனது விளக்கத்தை கொடுத்தார். பின்னர், தயாரிப்பாளரும் இதுகுறித்து விவாதித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதனால் செய்தியாளர்கள் அமைதி காத்தனர். இப்படத்தில் நான் நான்கு பாடல்கள் எழுதியுள்ளேன். இதுநாள் வரை எனக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளருக்கு எனது நன்றிகள் என ஜெகன் கவிராஜ் மேடையில் பேசினார்.
மேலும், நான் இப்படத்தில் தயாரிப்பு நிர்வாகியாகவும் பணிபுரிந்துள்ளேன். படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததை விட அதிகமானதால் இதுகுறித்து தயாரிப்பாளருக்கு தெரிவித்தேன். அந்த கோவத்தில் இயக்குநர் எனது பெயரை போட மறுத்துவிட்டார்" என ஜெகன் கவிராஜ் பேசினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்