சென்னை: ஆறாவது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் தொடரானது அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து காசிமா, நாகஜோதி, மித்ரா, மரிய இருதயம் ஆகிய வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், சென்னை புது வண்ணாரப்பேட்டை செரியன் நகரை சேர்ந்த 17 வயதான காசிமா மகளிர் தனிப்பிரிவு, இரட்டையர் பிரிவு, குழு போட்டி என மூன்று பிரிவுகளிலும் தங்கம் என்று சாதனை புரிந்துள்ளார். இவரின் தந்தை ஆட்டோ ஓட்டுநர் ஆவார்.
போட்டி முடிந்ததை அடுத்து, வரும் 21ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து காசிமா பதக்கத்தோடு நாடு திரும்ப உள்ளார். போட்டிக்கு செல்லும் முன்னதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி சந்தித்தார். அப்போது வீராங்கனை காசிமா உள்ளிட்ட 4வீராங்கனைகளுக்கும் பயணம் உள்ளிட்ட செலவினங்களுக்காக நிதி உதவியாக 1.5லட்ச ரூபாயை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் வழங்கி வீராங்கனைகள் வெற்றி பெற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: டாடா ஸ்டீல் செஸ் சாம்பியன்ஷிப்: மாக்னஸ் கார்ல்சன் சாம்பியன்! பிரக்ஞானந்தா 2வது இடம்!
இந்தநிலையில் வெற்றி பெற்ற காசிமாவிற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில்,"அமெரிக்காவில் நடைபெற்ற ஆறாவது #CarromWorldCup-இல் சென்னையைச் சேர்ந்த நம் தமிழ்மகள் காசிமா மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளதற்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்! பெருமை கொள்கிறேன் மகளே.. எளியோரின் வெற்றியில்தான் திராவிடமாடல்-இன் வெற்றி அடங்கியிருக்கிறது" என தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்