டுரின்: உலக டென்னிஸ் தரவரிசையில் டாப் 8 இடங்களில் இருக்கும் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு முன்னணி வீரர்கள் மட்டும் கலந்து கொள்ளும் ஏடிபி டென்னிஸ் இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதிச் சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் சிவெரேவ் - அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் என்பவருடன் பலப்பரீட்சை நடத்தினார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய டெய்லர் பிரிட்ஸ் ஆட்ட முடிவில் 6-க்கு 3, 3-க்கு 6, 7-க்கு 6 என்ற செட் கணக்கில் சிவெரேவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
Finalists locked in and had many unforgettable moments. This was day 7 🙌@emirates | #EmiratesFlyBetterMoments | #partner pic.twitter.com/3ROrklJl1i
— ATP Tour (@atptour) November 16, 2024
இதன் மூலம் ஏடிபி ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் அமெரிக்க வீரர் என்ற வரலாற்று சாதனையை டெய்லர் பிரிட்ஸ் படைத்தார். மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் இத்தாலியை சேர்ந்த ஜன்னிக் சின்னர், நார்வே வீரர் கேஸ்பர் ரூட்டை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வந்த ஜன்னிக் சின்னர், எதிரணி வீரர் கேஸ்பர் ரூட்டுக்கு வாய்ப்பு கொடுக்காமல் கடும் நெருக்கடி அளித்து வந்தார். இதனால் தொடக்கத்திலேயே ஜன்னிக் சின்னர் தான் இறுதிப் போட்டிக்கு நுழைவார் என ஏறக்குறைய உறுதியானது.
அதேபோல், ஆட்ட நேர முடிவில் ஜன்னிக் சின்னர் 6-க்கு 1, 6-க்கு 2 என்ற நேர் செட் கணக்கில் கேஸ்பர் ரூட்டை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் இறுதிப் போட்டியில் இத்தாலியை சேர்ந்த ஜன்னிக் சின்னர் - அமெரிக்காவை சேர்ந்த டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் மோத உள்ளனர்.
Title on the line… 🏆
— ATP Tour (@atptour) November 16, 2024
Who will be crowned champion in Torino 👑 #NittoATPFinals pic.twitter.com/23Q3Y5iyGb
ஏற்கனவே இருவரும் அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோதி உள்ளனர். அந்த ஆட்டத்தில் ஜன்னிக் சின்னர் 6-க்கு 3, 6-க்கு 4, 7-க்கு 5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆடவர் உலக டென்னிஸ் தரவரிசையில் ஜன்னிக் சின்னர் முதல் இடத்தில் உள்ளார்.
அவரை எதிர்கொள்வது டெய்லர் பிரிட்ஸ்க்கு சாதாரண காரியம் அல்ல. இருப்பினு அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் கண்ட தோல்விக்கு டெய்லர் பிரிட்ஸ் இந்த முறை நிச்சயம் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 240 பந்து.. 439 ரன்... வரலாறு படைத்த போட்டி! இறுதியில் முடிவு யாருக்கு தெரியுமா?