சென்னை : சென்னை, தாம்பரம் அடுத்த சேலையூர் அகரம்தென் கிராமத்திற்குட்பட்ட இடத்தில் ஒரு ஏக்கர் அரசு புறம் போக்கு நிலத்தை கடந்த 2015ம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் 773 பேர் பட்டா போட்டு அபகரித்துள்ளனர். இதையடுத்து கடந்த 2015ம் ஆண்டு அந்த இடம் மீண்டும் அரசு நிலமாக மாற்ற கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பரிந்துரை செய்தார். அதன் பேரில் 2023ம் ஆண்டில் பட்டா ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் அந்த இடத்தை மர்ம நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் சேலையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து போலி ஆவணம் தயார் செய்ய மூளையாக செயல்பட்ட, சமீபத்தில் என்கவுண்டர் செய்யப்பட்ட சிட்லபாக்கத்தில் உள்ள சீசிங் ராஜா வீடு மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட நபர்களின் 14 இடங்களில் உள்ள வீடுகளில் 100க்கும் மேற்பட்ட போலீசார் துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க : என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடியின் வீடு உள்பட 10 இடங்களில் 100 போலீசார் தீவிர சோதனை
போலி ஆவணங்களை கைப்பற்றும் நடவடிக்கையாக இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்பட்டது. காலை முதல் சிட்லபாக்கம், குரோம்பேட்டை, வில்லிவாக்கம் உள்ளிட்ட 14 இடங்களில் நடைபெற்ற சோதனை தற்போது நிறைவு பெற்றது. இந்த சோதனையில் 400க்கும் மேற்பட்ட பல்வேறு ஆவணங்கள் மற்றும் ஹார்டிஸ்குகள் (hard disk) வங்கி கணக்கு புத்தகங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆவணங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்