சென்னை:டி20 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுடனான இறுதிப்போட்டியில் வென்ற இந்திய அணி உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இதனை தொடர்ந்து இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி ஜூலை 6ஆம் தேதி ஹராரேவில் தொடங்குகிறது. தொடர்ந்து ஜூலை 7, 10, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மற்ற நான்கு டி20 கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற உள்ளன.
இத்தொடரில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த அணியில் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட அணியின் மூத்த வீரர்களுக்கு ஒய்வு அளிக்கப்பட்டிருந்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், அபிஷேக் சர்மா, துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்ட இளம் வீரர்களுடன் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த தொடரில் முதல் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சிவம் துபே மற்றும் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன், விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.