மும்பை:பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது மும்பையில் நாளை நடைபெறும் பிசிசிஐ ஆண்டு விழாவில் வழங்கப்பட உள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இந்திய கிரிக்கெட் அணியின் முதலாவது கேப்டன் சி.கே.நாயுடுவை கவுரவிக்கும் வகையில் அவரது பெயரில் கடந்த 1994ஆம் ஆண்டு முதல் கிரிக்கெட் வீர ர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. அதன்படி 2024ஆம் ஆண்டுக்கான 31ஆவது வாழ்நாள் சாதனையாளர் விருதினை நாளை சச்சின் டெண்டுல்கர் பெறுகிறார். கடந்த 2023ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு வழங்கப்பட்டது.
வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் 51 வயதாகும் சச்சின் டெண்டுல்கர் இந்தியாவின் சார்பில் 664 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் கிரிக்கெட், ஒரு நாள் போட்டி இரண்டிலும் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமைக்கு உரியவர். கடந்த 2010ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கிரிக்கெட் உலக வரலாற்றில் முதன் முறையாக இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார்.
சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகள், 463 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். டெஸ் போட்டிகளில் 15,921 ரன்களையும், ஒரு நாள் போட்டிகளில் 18,426 ரன்களையும் குவித்து சாதனை படைத்திருக்கிறார். முதன் முதலாக பாகிஸ்தானுக்கு எதிராக 1989ஆம் ஆண்டு 16ஆவது வயதில் கிரிக்கெட் வீரராக சச்சின் களம் இறங்கினார்.2013ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மும்பையில் ஆயிரகணக்கான ரசிகர்களுக்கு முன்பு அறிவித்தார். இதனை கேட்டு பல ரசிகர்கள் உணர்ச்சி வசப்பட்டு அழுதனர்.
இதையும் படிங்க:"அஜித்திற்கு முதல் கால் விஜய்யிடம் இருந்து தான் வந்தது"... மனம் திறந்த சுரேஷ் சந்திரா!
சச்சின் தவிர, டி20 உலக கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடியதற்காக ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஆண்கள் பிரிவில் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருதும், நான்கு ஒரு நாள் போட்டிகள் உட்பட 2024ல் கிரிக்கெட் போட்டிகளில் 743 ரன்கள் குவித்த பெண் கிரிக்கெட் வீரர் ஸ்மிருதி மந்தனாவுக்கு பெண்கள் பிரிவில் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருதும் வழங்கப்பட உள்ளது.
2024ஆம் ஆண்டு ஓய்வு பெறுவதாக அறிவித்த ரவிசந்திரன் அஸ்வினுக்கு கிரிக்கெட்டுக்கு அவர் அளித்த பங்களிப்புக்காக பிசிசிஐயின் சிறப்பு விருது பெறுகிறார். 2024ஆம் ஆண்டு கிரிக்கெட்டுக்கு அறிமுகம் ஆன சர்ஃபராஸ் கான், சிறந்த சர்வதேச அறிமுக வீரர் என்ற விருது வழங்கப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவரது சிறப்பான செயல்பாடு, நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 150 ரன்கள் குவித்தது ஆகியவற்றின் காரணமாக அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிசிசிஐயின் உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரருக்கான விருது தனுஷ் கோட்டியனுக்கு வழங்கப்படுகிறது. ரஞ்சி கோப்பை போட்டிகளில் 29 விக்கெட்கள் 502 ரன்களை அவர் குவித்துள்ளார்.