ஐதராபாத்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒருநாள் தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ரோகித் சர்மா இரண்டாவது இடம் பிடித்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் ரோகித் சர்மா 2வது இடத்தை பிடித்து உள்ளார்.
முதல் இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் உள்ளார். அவருக்கும் ரோகித் சர்மாவுக்கு பெரிய வித்தியாசம் இல்லை. பாபர் அசாம் 824 புள்ளிகளுடன் முதலிடத்திலும் அவரை விட 59 புள்ளிகள் குறைவாக ரோகித் சர்மா இரண்டாவது இடத்திலும் உள்ளார். மற்றொரு இந்திய வீரர் சுப்மன் கில் மூன்றாவது இடத்திற்கு இறங்கி உள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 2-க்கு 0 என்ற கணக்கில் இழந்த போதிலும் ரோகித் சர்மாவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா மொத்தம் 157 ரன்கள் குவித்தார். இரண்டு அரை சதமும் ரோகித் சர்மா விளாசினார். அதேநேரம் மற்றொரு சீனியர் வீரர் விராட் கோலி 3 போட்டிகளில் வெறும் 58 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
இலங்கை மண்ணில் சுப்மன் கில் ரன் குவிக்க கடுமையாக போராடினார். இருப்பினும் அவரது முயற்சிகள் பலனளிக்கவில்லை. இலங்கை வீரர் அவிஷ்கா பெர்னான்டோ 20 இடங்கள் முன்னேறி 68 இடத்தை பிடித்து உள்ளார். இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவிஷ்கா பெர்னான்டோ 93 ரன்கள் விளாசியதன் மூலம் அவரது தரவரிசை புள்ளிகள் அதிகரித்துள்ளன.