ஐதராபாத்: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அண்மையில் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அண்மையில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில், டி20 உலகக் கோப்பையுடன் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா தொடர்ந்து நீடித்து வருகிறார். இந்நிலையில், ரோகித் சர்மாவின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து அவரது சிறு வயது பயிற்சியாளர் தினேஷ் லேட் கணித்துள்ளார். தனியார் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், 2027 ஆம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலக கோப்பை தொடருக்கு பின்னரும் ரோகித் சர்மா தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார் எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருடன் ரோகித் சர்மா ஓய்வு பெறலாம் என்றார். இருப்பினும், 2027ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா, நமீபியா மற்றும் ஜிம்பாப்வேயில் நடைபெறும் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரை ரோகித் சர்மா விளையாடலாம் என எண்ணுவதாக அவர் தெரிவித்தார்.