ஐதராபாத்:தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் (109 ரன்) மற்றும் திலக் வர்மா (120 ரன்) ஆகியோர் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார்.
தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 18.2 ஓவர்கள் முடிவில் 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஹர்திக் பாண்ட்யா, ரமன்தீப் சிங், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தி அசத்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. இந்த ஆண்டில் இந்திய அணி விளையாடிய கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி போட்டியில் இந்திய அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்த சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோர் மேலும் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்களாகி உள்ளனர்.
ஒரு டி20 இன்னிங்சில் சதம் விளாசிய மூன்றாவது ஜோடி என்ற சாதனையை சஞ்சு சாம்சன் - திலக் வர்மா ஜோடி படைத்தது. இதற்கு முன் 2022ஆம் ஆண்டு பல்கேரியா அணிக்கு எதிரான போட்டியில் செக் குடியரசு வீரர்கள் சபாவுன் டேவிசி - டிலான் ஸ்டெய்ன் ஆகியோர் முதல் முறையாக ஜோடியாக சதம் விளாசி இருந்தனர்.